Last Updated : 18 Feb, 2020 04:00 PM

 

Published : 18 Feb 2020 04:00 PM
Last Updated : 18 Feb 2020 04:00 PM

தக்காளி, வெங்காயம் விற்கிறோம், வாங்குறோம்; ஏன் இந்தியா-பாக். கிரிக்கெட் மட்டும் ஆடுவதில்லை: ஷோயப் அக்தர் கேள்வி

கோப்புப்படம்

லாகூர்

இந்தியா, பாகிஸ்தானில் இருந்து தக்காளி, வெங்காயம் இறக்குமதி, ஏற்றுமதி செய்கிறோம், அதைச் சாப்பிடுகிறோம், ஆனால், இருநாடுகளுக்கு இடையே ஏன் கிரிக்கெட் போட்டி நடத்துவதில்லை என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப்பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரசியல்ரீதியான உறவு மிகவும் மோசமடைந்ததால், கடந்த 7 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆனால் இரு அணிகளும் பொது இடத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆனால், இரு நாட்டு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதே இரு நாட்டு ரசிகர்களும் வரவேற்கின்றனர்.

பாக். முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் : கோப்புப்படம்

இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவும், பாகிஸ்தானும் டேவிஸ் கோப்பைப் போட்டியில் விளையாடுகின்றன. கபடி விளையாட்டில் இரு அணிகளும் பங்கேற்கின்றன, ஆனால், கிரிக்கெட் போட்டி மட்டும் ஏன் இந்தியா, பாகிஸ்தான் விளையாடுவதில்லை.

இந்தியாவுடன் உறவைப் பாகிஸ்தான் துண்டிக்க முடிவு செய்தால், ஒட்டுமொத்தமாகத் துண்டித்துவிடுங்கள். வர்த்தகத்தையும் நிறுத்த வேண்டும், விளையாட்டையும் நிறுத்த வேண்டும். ஆனால், கபடி, டென்னிஸ் விளையாடுகிறீர்கள், ஆனால் கிரிக்கெட் மட்டும் விளையாட அனுமதி மறுப்பது ஏன்?

இருநாடுகளில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதியாகும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை இரு நாட்டு மக்களும் சாப்பிடுகின்றனர். ஆனால், கிரிக்கெட் போட்டிகளை மட்டும் ஏன் நடத்துவதில்லை?

இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது, பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்ல முடியாது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற போட்டிகள் நடுநிலையான இடங்களில் நடக்கும் போது விளையாடுகிறோம். உலகிலேயே மிகச்சிறந்த விருந்தோம்பல் கொண்ட நாடுகளாக இரு நாடுகளும் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது இந்தியா முதலில் முன் வர வேண்டும்.

விரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நாங்கள் அதிகமாக விரும்புகிறோம். இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விரைவில் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடும் என நம்புகிறேன். இரு அணிகளுக்கும் இடையே அந்த போட்டித் தொடர் முக்கியமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும்.

பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளப் பாதுகாப்பான நாடுதான். இந்தியக் கபடி அணிகூட இங்கு வந்து விளையாடியுள்ளார்கள். எங்களின் அன்பையும்,வரவேற்பையும் பார்த்திருப்பார்கள். வங்கதேச அணி இங்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினர். ஒருவேளை பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுவதில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருப்பதாக இந்திய அணி கருதினால், நடுநிலையான இடத்தை தேர்வு செய்யலாம்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆகியோர் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தால் அது டெஸ்ட் போட்டிக்கும், இரு அணிகளுக்கும் சிறந்ததாக அமையும் என்று தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு ஷோயப் அக்தர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x