Published : 18 Feb 2020 12:27 PM
Last Updated : 18 Feb 2020 12:27 PM

எதிரணியினர் எவ்வளவு ரன்களைக் குவித்தாலும் திருப்பி அடிப்போம்: இயான் மோர்கனின் உ.கோப்பை சவால்

டி20 கிரிக்கெட்டில் அன்று தென் ஆப்பிரிக்காவின் இமாலய இலக்கான 222 ரன்களை விரட்டி 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதையடுத்து எதிரணியினர் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் திருப்பி விரட்டுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று தென் ஆப்பிரிக்க அணி ஹெய்ன்ரிச் கிளாசனின் 33 பந்து 66 ரன்களினால் தென் ஆப்பிரிக்கா 222/6 என்று இமாலய இலக்கை எட்டியது, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 5 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.

22 பந்துகளில் மோர்கன் 57 ரன்களை பறக்க விட்டார், இதில் 7 சிக்சர்கள் அடங்கும். ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் 57 ரன்களையும் ஜானி பேர்ஸ்டோ 34 பந்துகளில் 64 ரன்களையும் விளாசித் தள்ளினர்.

இது குறித்து இயான் மோர்கன் கூறும்போது, “இம்மாதிரியான விரட்டல்கள் எந்த இலக்கையும் விரட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெரிய இலக்குகளை விரட்டும் போது நம் பேட்டிங் முறைகளை இது மறு உறுதிப் படுத்துகிறது.

நம்மால் என்ன முடியும் என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விரட்டல்கள். நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. மட்டைதான் பேச வேண்டும்.

இத்தகைய அணுகுமுறை எப்போதும் பயனளிக்கும் என்று கூற முடியாது ஆனால் வெற்றிக்கான வாய்ப்பை இது உருவாக்கும்.

ஜோஸ்பட்லரை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன், ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்ற ஒரு திறமையுடையார் பட்லர்.

இப்போதைக்கு இங்கிலாந்தின் டாப் 3 பேட்ஸ்மென்கள் அதிக பந்துகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும், இன்று உலகிலேயே இந்த டாப் 3 உண்மையில் எதிரணியினருக்கு அதிக சேதம் ஏற்படுத்தக்கூடியவர்கள் இவர்கள்தான்.

இந்த நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னால் மாற்றம் வந்தால் மட்டுமே இடைவெளியை நிரப்ப வேண்டி வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் ஆனால் இப்போதைக்கு இந்த லைன் அப் தான் பெரிய அதிரடி லைன் அப் ஆகும்.” என்றார் மோர்கன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x