லாரியஸ் ஆண்டின் சிறந்த உலக விளையாட்டு வீரர் விருதை வென்றனர் ஹாமில்டன், மெஸ்ஸி

லாரியஸ் ஆண்டின் சிறந்த உலக விளையாட்டு வீரர் விருதை வென்றனர் ஹாமில்டன், மெஸ்ஸி
Updated on
1 min read

20 ஆண்டுகால லாரியஸ் விருது வரலாற்றில் முதல் முறையாக சிறந்த விளையாட்டு வீரர் விருதை இரண்டு வீரர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன், அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான மதிப்பு மிக்க லாரியஸ் விருதை பகிர்ந்து கொண்டனர்.

பெர்லினில் நடைபெற்ற விழாவில் 2011 உலகக்கோப்பையில் சாம்பியன் இந்திய அணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தோள்களில் சுமந்து சென்றது சிறந்த விளையாட்டுத் தருணமாகத் தேர்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் வாக்களிப்பில் சச்சின் டெண்டுல்கர் வெற்றி பெற்று இந்த விருதை வென்றார்.

6 முறை பார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்ற லூயிஸ் ஹாமில்டன், 6 முறை ஃபீபா சிறந்த கால்பந்து விருது வென்ற மெஸ்ஸி இருவருக்குமிடையே விருதை வெல்வதில் கடும் போட்டி நிலவியது. வாக்களிப்பு இருவருக்கும் சரிசமமாக விழுந்து ‘டை’ ஆக இருபது ஆண்டுகால லாரியஸ் விருது வரலாற்றில் முதல் முறையாக உயரிய விருது இரு வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கால்ஃப் நட்சத்திரம் டைகர் உட்ஸ், கென்யாவின் மாரத்தான் மேதை எலியுட் கிப்சோக், டென்னிஸ் லெஜண்ட் ரஃபேல் நடால், மோட்டோ ஜிபி வீரர் மார்க் மார்க்வேஸ் ஆகியோரைக் கடந்து மெஸ்ஸி, ஹாமில்டன் லாரியஸ் உயரிய விருதை வென்றனர்.

2019 ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க ரக்பி அணி 2வது முறையாக லாரியஸ் உலக சிறந்த அணி விருதைத் தட்டிச் சென்றது.

அமெரிக்க ஜிம்னாஸிய வீராங்கனை சிமோன் பைல்ஸ் லாரியஸ் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை 3ம் முறையாகத் தட்டிச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in