

கெய்ன்ஸ் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வந்த 9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் கொனேரு ஹம்பி தனது கடைசி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த வீராங்கனையான துரோணவள்ளி ஹரிகாவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தை முடித்த கொனேரு ஹம்பி 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பிக்கு சுமார் ரூ.32.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் விரைவு செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பி தற்போது கெய்ன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளளார். இந்த சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 5 இஎல்ஓ புள்ளிகளை பெற்று உலகத் தரவரிசையில் 2-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளார் 32 வயதான கொனேரு ஹம்பி.
கொனேரு ஹம்பி கூறும்போது, “இதுபோன்று வலுவான தொடரை வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொடரில் முன்னாள் உலக சாம்பியனான ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக்கிற்கு எதிராக விளையாடி 7-வது சுற்று நீண்ட போராட்டமாகவும் கடினமாகவும் இருந்தது.
எனினும் அந்த ஆட்டம் அலெக்ஸாண்ட்ராவிடம் 5-வது முறையாக தோற்கவில்லை என்ற சாதனையை தக்கவைத்துக் கொள்ள உதவியாக இருந்தது. இத்தாலியில் வரும் மே மாதம் நடைபெறும் கிராண்ட் பிரிக்ஸ் தொடரிலும், அதன் பின்னர் இந்தியாவில் நடைபெறும் பிஎஸ்பிபி தொடரிலும் கலந்து கொள்ள உள்ளேன்” என்றார்.
துரோணவள்ளி ஹரிகா 4.5 புள்ளிகள் பெற்று 5-வது இடம் பிடித்தார். உலக சாம்பியனான சீனாவின் வென்ஜுன் ஜூ 5.5 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார். - பிடிஐ