Last Updated : 17 Feb, 2020 10:39 AM

 

Published : 17 Feb 2020 10:39 AM
Last Updated : 17 Feb 2020 10:39 AM

மிரட்ட வருகிறார் டிரன்ட் போல்ட்; 6.6அடி உயரமுள்ள ஜேமிஸன் அறிமுகம்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- நியூஸி. அணி அறிவிப்பு

டிரன்ட் போல்ட்: கோப்புப்படம்

வெலிங்டன்

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூஸிலாந்து அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸனும் டெஸ்ட் தொடருக்கு அறிமுகமாகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதால், டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி, நீல் வாக்னர் இருக்கும் நிலையில் போல்ட், ஜேமிஸன் வருகை அந்த அணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும். ஒருநாள் தொடருக்கு மட்டும் அறிமுகமான ஜேமிஸன் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் அறிமுகமாகிறார். உயரமான ஜேமிஸனிந் ஸ்விங் பந்துவீச்சும், வேகமும் இந்திய அணிக்குக் கடும் சவாலாக அமையக்கூடும்.

சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை மிட்ஷெல் சான்ட்னருடன் இந்த முறை அஜாஸ் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்று நியூஸிலாந்து கைப்பற்ற அஜாஸ் படேல் முக்கியக் காரணமாக இருந்தார் என்பதால் அவர் டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கைல் ஜேமிஸன்

அனுபவ வீரர் ராஸ் டெய்லருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் களமிறங்கும் 4-வது நியூஸிலாந்து வீரர் டெய்லர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை ஏற்கெனவே மெக்கலம், வெட்டோரி, பிளெமிங் ஆகியோர் கடந்திருந்தார்கள்.

ஆனால், ராஸ் டெய்லர்தான் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் சர்வதேச வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியைப் பொறுத்தவரை டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தாலும், ஒருநாள் தொடரில் இந்திய அணிக்குப் பதிலடி கொடுத்தது.

இப்போதுள்ள சூழலில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அதிகமான 360 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி துரத்திக்கொண்டு வருகிறது. தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைக்க இந்த டெஸ்ட் தொடரை வெல்வது அவசியமாகும்.

நியூஸி. அணி விவரம்:
கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டாம் லாதம், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், ஹென்ரி நிகோலஸ், வாட்லிங், கோலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி, நீல் வாக்னர், டிரன்ட் போல்ட், அஜாஸ் படேல், கெயில் ஜேமிஸன், டேர்ல் மிட்ஷெல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x