Published : 16 Feb 2020 10:18 AM
Last Updated : 16 Feb 2020 10:18 AM

சால்ட்லேக் மைதானத்தில் இன்று மோதல்: கொல்கத்தா வெற்றிக்கு தடை போடுமா சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா - சென்னையின் எப்சி மோதுகின்றன.

அன்டோனியோ லோபஸ் ஹபாஸ் பயிற்சியாளராக உள்ள கொல்கத்தா அணி 16 ஆட்டங்களில் 10 வெற்றி, 3 டிரா, 3 தோல்விகளுடன் 33 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றில் நுழைவதை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது. இந்த சீசனில் அந்த அணி தனது சொந்த மண்ணில் கடைசி லீக் ஆட்டத்தை 2 முறை சாம்பியனான சென்னையின் எப்சி-க்கு எதிராக இன்று விளையாடுகிறது.

கொல்கத்தா தனது கடைசி 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் ராய் கிருஷ்ணா சிறந்த பார்மில் இருப்பது பெரிய பலமாக உள்ளது. இந்த சீசனில் 13 கோல்களை அடித்துள்ள பிஜி நாட்டைச் சேர்ந்த ராய் கிருஷ்ணா அதிக கோல்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் கோவா அணியின் ஃபெரான் கொரோமினாஸூடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராய் கிருஷ்ணா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியிருந்தார். அவருடன் கார்சியா, போட்டிக்கான முழு உடல் தகுதியை பெற்றுள்ள டேவிட் வில்லியம்ஸ் ஆகியோரும் சென்னையின் எப்சி தற்காப்பு ஆட்டக்காரர்களான லூசியன் கோயன், சபியா ஆகியோருக்கு சவால் அளிக்கக்கூடும்.

பிரபிர் தாஸ், மைக்கேல் சூசைராஜ் ஆகியோரும் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.

சென்னையின் எப்சி 15 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகளுடன் 22 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தையும் சேர்த்து சென்னையின் எப்சி-க்கு 3 ஆட்டங்கள் மட்டுமே உள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் அடுத்தடுத்து வெற்றிகளை பெற வேண்டும் என நெருக்கடி உருவாகி உள்ளது.

ஏனெனில் கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, ஒடிசா, சென்னையின் எப்சி ஆகிய அணிகள் இடையேயான போட்டி நிலவி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதில் சென்னையின் எப்சி தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

கொல்கத்தா அணிக்கு ராய் கிருஷ்ணா வலுவாக இருப்பது போல் சென்னையின் எப்சி-க்கு நெரிஜஸ் வால்ஸ்கிஸ் உள்ளார். இந்த சீசனில் 12 கோல்கள் அடித்துள்ள அவர், 5 கோல்கள் அடிக்க உதவியும் செய்துள்ளார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். இடை நீக்கத்தில் இருந்து அனிருத் தாபா அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் வலுசேர்க்கக்கூடும். சென்னையின் எப்சி 15 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகளுடன் 22 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x