Published : 16 Feb 2020 10:12 AM
Last Updated : 16 Feb 2020 10:12 AM

20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பாவனா ஜாட்

20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் தேசிய சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்துள்ள இந்தியாவின் பாவனா ஜாட், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நடை பந்தய தேசிய சாம்பியன்ஷிப் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள கப்ரா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான பாவனா ஜாட் இலக்கை ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் 54 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் பாவனா.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு 1:31:00 விநாடிகளே பொதுமானதாகும். ஏழ்மையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாவனா கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பில் பந்தய தூரத்தை 1:38.30 விநாடிகளில் கடந்திருந்தார். தற்போது அதைவிட 8 நிமிடங்கள் குறைவாக இலக்கை அடைந்து அசத்தியுள்ளார்.

பாவனா தற்போது ஜெய்ப்பூரில் பயிற்சி பெற்று வருகிறார். அவரது பயிற்சியாளராக குர்முக் சிஹாக் பணியாற்றி வருகிறார். பாவனா இதற்கு முன்னர் ஜூனியர் அல்லது சீனியர் மட்டத்தில் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றது இல்லை. மேலும் இந்திய தடகள சங்கம் நடத்தும் தேசிய பயிற்சி முகாமில் கூட பாவனா கலந்து கொண்டது இல்லை.

கடந்த 2016-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் இருந்துதான் பாவனா தனது நடை பந்தயத்தை தொடங்கி உள்ளார். அந்த தொடரில் பாவனா இலக்கை 1:52:38 விநாடிகளில் கடந்து 5-வது இடமே பிடித்திருந்தார். பாவனா கூறும்போது, “எனது கனவு நினைவாகி உள்ளது. பயிற்சியின் போது இலக்கை 1:27:00 விநாடிகளில் அடைவேன். இதனால் சூழ்நிலைகள் அனைத்தும் சரியாக அமைந்தால் ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான இலக்கை எட்ட முடியும் என்பது தெரியும். எனது பயிற்சியாளருடன் கடந்த சில மாதங்களாக கடினமாக உழைத்ததன் காரணமாகவே இதுபோன்ற செயல்திறனை வெளிப்படுத்த முடிந்தது” என்றார்.

பாவனா தற்போது இந்திய ரயில்வேயில் கொல்கத்தாவில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். வரும் 15-ம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய நடை பந்தய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x