Last Updated : 15 Feb, 2020 04:17 PM

 

Published : 15 Feb 2020 04:17 PM
Last Updated : 15 Feb 2020 04:17 PM

3 போட்டிகளை பார்த்துவிட்டு, பும்ராவின் திறமையை எப்படி கேள்வி எழுப்ப முடியும்? முகமது ஷமி ஆவேசம்

முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா : கோப்புப்படம்

ஹேமில்டன்

நியூஸிலாந்துக்கு எதிரான 3 அல்லது நான்கு போட்டிகளைப் பார்த்துவிட்டு வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் திறமை மீது எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகு தண்டு காயம் காரணமாக 2 மாதங்களாக ஓய்வில் இருந்துவிட்டு, ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து விளையாடி வருகிறார். நியூஸிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் பும்ராவின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்று பெரும்பாலானவர்கள் குற்றச்சாட்டாக வைக்கிறார்கள்.

காயத்தால் வீழ்வதற்கு முன் பும்ராவின் பந்துவீச்சில் ஆவேசம், துல்லியம், வேகம் கலந்திருந்தது, ஆனால் நியூஸிலாந்து தொடரில் பும்ராவின் தயக்கத்தோடு பந்துவீசுவது போன்று இருக்கிறது என்று கூறப்படுகிறது. பும்ராவின் பந்துவீச்சைப் பார்த்த முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூட ஆலோசனை தெரிவித்திருந்தார். பும்ரா தயக்கமின்றி பந்துவீச வேண்டும், களத்தில் ரிஸ்க் எடுக்கவேண்டும் என்று ஜாகீர்கான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்பாக நியூஸிலாந்து லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சிப்போட்டியில் விளையாடி வருகிறது. இதில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பும்ராவின் திறமை மீது சந்தேகம் எழுந்துள்ளது குறித்து சக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

2 அல்லது 3 போட்டிகளை வைத்துக்கொண்டு நீங்கள் பும்ராவின் திறமை குறித்து ஆலோசிப்பது எனக்குப் புரிகிறது. பும்ரா கடந்த 3 போட்டிகளில் சரியாகப் பந்துவீசவில்லை என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, பும்ராவால் எத்தனை போட்டிகளை நாம் வென்றிருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள், அதை ஒதுக்கிவிட முடியாது.

இந்தியாவுக்காக பும்ரா என்னவெல்லாம் சாதித்துக் கொடுத்தார், எப்படி உங்களால் பும்ராவின் பந்துவீச்சால் இந்திய அணி பெற்ற வெற்றிகளை மறக்க முடியும், புறந்தள்ள முடியும். நீங்கள் பும்ரா திறமை குறித்து நேர்மறையாகச் சிந்தித்தால், அது அவருக்கு நல்லவிதமாக அமைந்து, அவரின் நம்பிக்கையை மேலும் வளர்க்கும்.

எப்போதுமே ஒருவிளையாட்டு வீரர் என்பது வித்தியாசமானவர். வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு விளையாட்டு வீரரின் பணியைச் சாதாரணமாகப் பார்க்கிறார்கள், அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள் என்று எளிதாகக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் வைக்க முடியும்.

ஒவ்வொரு விளையாட்டு வீரரும் காயத்தில் விழும்போது, அவரின் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக நேர்மறையான விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

சில போட்டிகளில் ஒரு வீரர் சரியாக விளையாடாவிட்டால், சிலர் வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள், பார்க்கிறார்கள். எங்களைப் பொருத்தவரை அதைப்பற்றிச் சந்திக்கக்கூடாது.

இவ்வாறு ஷமி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x