Published : 15 Feb 2020 01:38 PM
Last Updated : 15 Feb 2020 01:38 PM

டி காக்கின் இடி போன்ற சிக்சர்களில் அரண்டு போன இங்கிலாந்து: பரபரப்பான அதிக ஸ்கோர் போட்டியில் டாம் கரனின் கடைசி ஓவரால் இங்கிலாந்து வெற்றி

டர்பனில் நடைபெற்ற இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து அணி வீழ்த்தி தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் 202/7 என்று முடிந்தது.

தென் ஆப்பிரிக்க அணியில் 17 பந்துகளில் அரைசதம் கண்ட டி காக் தென் ஆப்பிரிக்கா அதிவேக அரைசத சாதனையை நிகழ்த்தினார்.

டாம் கரனின் த்ரில் கடைசி ஓவர்:

19வது ஓவரில் கிறிஸ் ஜோர்டான் 11 ரன்களை கொடுக்க வான் டெர் டியூசன் 26 பந்துகளில் 43 ரன்களுடனும் டிவைன் பிரிடோரியஸ் 8 பந்துகளில் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டாம் கரன் வீச வந்தார், முதல் பந்து ஸ்லோ பாலாக அமைய பிரிடோரியஸ் அடிக்கும் முயற்சி தோல்வியில் முடிய டாட் பால் ஆனது. 5 பந்துகள் 15 ரன்கள் என்ற நிலையில் அடுத்த பந்தை பிரிடோரியஸ் மிட்விக்கெட் மேல் செந்தூக்கு தூக்கி சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த பந்தையும் பிரிடோரியஸ் எக்ஸ்ட்ரா கவர் மேல் தூக்கி அடித்து 4 ரன்களை விளாசினார். 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை. அடுத்த பந்து லெக் ஸ்டம்ப் யார்க்கர் மிட்விக்கெட்டில் தட்டி விட்டு 2 ரன்களை வேகமாக எடுத்தனர், இந்த 2 ரன்கள்தான் விதியின் வலை என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஒரு ரன் எடுத்து வான் டெர் டியூஸன் கையில் ஸ்ட்ரைக்கைக் கொடுத்திருந்தால் அவர் இருந்த மூடிற்கு சிக்சரையோ பவுண்டரியையோ அடித்திருப்பார், ஆனால் 2 ரன்கள் எடுத்து பிரிடோரியஸ் மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார்.

அப்போதுதான் கரன் மிகப்பிரமாதமான யார்க்கரை வீச பந்து வலது கால் பூட்ஸைத் தாக்கியது நடுவர் கையை உயர்த்தினார், பெவிலியனிலிருந்து டி காக் ரிவியூ கேள் என்று அலறினார், அதனையடுத்து பிரிடோரியஸ் ரிவியூ கேட்டார், பந்து மட்டையில் பட்டிருக்கலாம் என்ற ஐயம் இருந்தது, ஆனால் அம்பயர்ஸ் கால் என்பதில் பிரிடோறியஸ் அவுட் ஆனார்.

ஒரு பந்து 3 ரன்கள் என்ற நிலையில் ஃபொர்ட்டுயின் இறங்கினார், ஆனால் ஃபுல் பந்தை நேராக கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, வான் டெர் டியூசன் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 43 ரன்களுடன் ஸ்ட்ரைக் கிடைக்காமல் ரன்னர் முனையில் தேங்க, தென் ஆப்பிரிக்கா 2 ரன்களில் கோட்டை விட்டது. ஆனால் மோர்கனின் கேப்டன்சி அற்புதம் ஷார்ட் பைன்லெக்கை நிறுத்தியிருந்தார், அதனால் கடைசி விக்கெட் அங்கு கேட்ச் ஆனது.

குவிண்டன் டி காக் காட்டடி தர்பார்

203 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு தெ.ஆ. களமிறங்கிய போது கேப்டன் டி காக் மற்றும் தெம்பா பவுமா (31 ரன்கள் 29 பந்துகள்), டி காக் பவர் ப்ளேயி வெளுத்து வாங்கினர், குறிப்பாக டி காக்கின் காட்டடிக்கு முன்பாக இங்கிலாந்து பீஸ் பீஸ் ஆனது. மொயின் அலி முதல் ஓவரில் 4 ரன்கள், டாம் கரன் முதல் ஓவரில் 7 ரன்கள் 2 ஓவர்களில் 12என்று சாதாரணமாகத்தான் தொடங்கினர். 3வது ஓவரில் பவுமாவின் பவுண்டரியுடன் 11 ரன்கள் வந்தது, இந்த ஓவரை வீசியவர் மொயின் அலி. 4வது ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீச டி காக் ஒரு அருமையான லெக் திசை சிக்சரை விளாச இந்த ஓவரில் 10 ரன்கள் வந்தது.

ஆனால் மொயின் அலிக்கு 3வது ஓவரைக் கொடுத்திருக்கக் கூடாது, மோர்கன் கொடுத்தார், டி காக் சிக்சர் மழை பொழியத் தொடங்கினார். 3வது பந்தை மிட் விக்கெட் மிட் ஆன் இடையே மிகப்பெரிய சிக்சரை அடித்த டி காக், 5வது பந்தை மீண்டும் எல்லை கோட்டைத் தாண்டி சிக்சருக்கு விரட்டினார், 6வது பந்து நேராக 90டிகிரியில் இன்னொரு சிக்ஸ். 20 ரன்களை மொயின் விட்டுக் கொடுக்க 5 ஓவர்களில் 53 என்று ஒரே ஓவரில் நிலைமை மாறியது.

அடுத்த ஓவரை டாம் கரனே தொடர, 5வது பந்து தாழ்வான புல்டாஸாக மாற சிக்ஸ். அடுத்த பந்து இலவசமாக லெக் திசையில் போட்டுக் கொடுக்க ஸ்கொயர்லெக்கில் மீண்டும் ஒரு பெரிய சிக்ஸ். பவர் ப்ளேயான 6 ஓவர்கள் முடிவில் 69 ரன்களை தென் ஆப்பிரிக்கா குவித்தது.

அடில் ரஷீத் வந்தவுடனேயே லெக் ஸ்டம்பில் வீச மீண்டும் டி காக் சிக்சருக்குத் தூக்க 17 பந்துகளில் டி காக் அரைசதம் கண்டு அதிவேக அரைசத தென் ஆப்பிரிக்க டி20 சாதனையை நிகழ்த்தினார். 8வது ஓவரை அதிவேக பவுலர் மார்க் உட் வீச இவரது ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட் மேல் தனது 8வது சிக்சருக்குப் பறக்க விட்ட டிகாக் மீண்டும் எக்ஸ்ட்ரா கவர் மேல் தூக்கி அடித்து 4 ரன்கள விளாசினார். கடைசியில் மார்க் உட்டின் ஃபுல்டாசை நேராக ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்தார், இது இடுப்புயர நோபால் என்ற சந்தேகமும் எழுந்தது உட் முன் கிரீசை லேசாக மீறியதாகவும் சந்தேகம் எழுந்தது ஆனால் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 65 ரன்களில் இதுதாண்டா டி20 இன்னிங்ஸ் என்று இங்கிலாந்தை மிரளச் செய்து சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார். 7.5 ஓவர்களில் 92/1 என்று வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா இருந்தது.

பவுமா 31 ரன்களில் மார்க் உட்டின் லெக் ஸ்டம்ப் பந்தை லெக் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேற, டேவிட் மில்லர் இறங்கி தன் பங்குக்கு 16 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 21 ரன்கள் விளாசி ஸ்டோக்ஸிடம் வெளியேற 13வது ஓவரில் 123/3 என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா.

வான் டெர் டியூஸன் இறங்கி விளாச, ஸ்மட்ஸ் 13 ரன்கள் எடுக்க அடுத்த 4 ஒவர்களில் 35 ரன்கள் வந்தது ஆனால் அப்போது ஸ்மட்ஸ் ஜோர்டானின் சமயோசிதமான லெக் ஸ்டம்ப் யார்க்கருக்கு பவுல்டு ஆகி வெளியேறினார். அடுத்த பந்தே பெலுக்வயோவுக்கும் ஒரு டெட்லி யார்க்கர் விழ இவரும் பவுல்டு ஆனார். 16.4 ஓவர்களில் 158/5 என்று தென் ஆப்பிரிக்கா சரிவு கண்டது. அதன் பிறகுதான் டிவைன் பிரிடோரியஸ் 13 பந்துகளில் 25 ரன்கள் விளாச, வான் டெர் டியூசனும், இவரும் சேர்ந்து 19 பந்துகளில் 44 ரன்களை சேர்த்து ஸ்கோரை 202 ரன்களுக்குக் கொண்டு வந்த போதுதான் கடைசி 2 பந்துகளில் டாம் கரண் இரண்டு விக்கெட்டுகளைப் பிரமாதமாகக் கைப்பற்றி இங்கிலாந்து சமன் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

ஜேசன் ராய் அதிரடி தொடக்கத்துடன் ஸ்டோக்ஸ் வெளுத்துக் கட்ட மொயின் அலி கடைசி காட்டடி:

அன்று 70 ரன்களை விளாசிய ஜேசன் ராய் நேற்ரு 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 40 ரன்களை விளாச, ஜானி பேர்ஸ்டோ 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 17 பந்துகளில் 35 ரன்களை இடி போல் இறக்க 25 பந்துகளில் 2வது விக்கெட்டுக்காக இருவரும் 52 ரன்களைச் சேர்த்தனர். பேர்ஸ்டோவுக்கு 1 ரன்னில் தன் பவுலிங்கிலேயே போர்ட்டுயின் கேட்சை விட்டார். அதன் பலனை அனுபவித்தனர்.

இந்த ஜோடியை ஆண்டில் பெலுக்வயோ (2/47) உடைத்தார், லுங்கி இங்கிடியிடம் ஜோஸ் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு இந்த விக்கெட் விழுந்தது. பேர்ஸ்டோ பெலுக்வயோவிடன் பவுல்டு ஆக, தப்ரைஸ் ஷம்சியிடம் ராய் கேட்ச் ஆகி வெளியேறினார்.

10-13 ஓவர்களிடையே 21 ரன்கள்தான் இங்கிலாந்து எடுத்தது. இயான் மோர்கன் 27 -ல் ஆட்டமிழக்க டென்லி 1 ரன்னில் வெளியேறினார் இங்கிலாந்து 16வது ஓவர் தொடக்கத்தில் 125/5 என்று சற்றே தடுமாறியது.

ஆனால் மொயின் அலி என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை 11 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 39 ரன்களை விளாசினார். அதிலும் ரீஸா ஹென்றிக்ஸ் வீசிய 17 வது ஓவரில் 21 ரன்கள், லுங்கி இங்கிடி வீசிய 18வது ஓவரில் 19 ரன்கள். ஸ்டோக்ஸ் ஒரு முனையில் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 47 ரன்கள் என்று தன் அதிகபட்ச டி20 ஸ்கோரை எட்டி நாட் அவுட்டாகத் திகந்தார். ஆனால் ஸ்டோக்ஸ் 34 ரன்களில் இருந்த போது அவருக்கு பவுமா கடினமான ஒரு கேட்சை விட்டார். பவுமா கேட்சை விடக்கூடிய பீல்டர் அல்ல. பென் ஸ்டோக்ஸும் மொயின் அலியும் 18 பந்துகளில் 51 ரன்கள் கூட்டணி அமைக்க, கடைசி 29 பந்துகளில் 79 ரன்கள் விளாசப்பட்டதால் 125/5 என்ற நிலையிலிருந்து 204/7 என்ற பெரிய ஸ்கோரை இங்கிலாந்து எட்டியது, இதுவே வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இந்த அதிரடிக்காக மொயின் அலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் இங்கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஞாயிறன்று செஞ்சூரியனில் 3வது, இறுதி டி20 போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x