Published : 14 Feb 2020 03:55 PM
Last Updated : 14 Feb 2020 03:55 PM

124 ஆண்டுகளுக்கு முன்: தெ.ஆ. கிரிக்கெட்டில் மறக்க வேண்டிய நாள்- 2 நாட்களில் முடிந்த டெஸ்ட்; 30 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி

இதே பிப்ரவரி 14ம் தேதி 124 ஆண்டுகளுக்கு முன்பாக 1896-ல் இங்கிலாந்திடம் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் வாங்கிய மிகப்பெரிய தோல்வியை அந்த நாடு நிச்சயம் மறந்திருக்கும். ஆனால் பதிவுகள் என்றும் அழியாது.

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக பயணம் மேற்கொண்டது, இதில் முதல் டெஸ்ட் போட்டி, அது 3 நாட்கள் டெஸ்ட் போட்டியாகும் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் இ.ஏ.ஹாலிவெல். இங்கிலாந்தின் கேப்டன் சர் டி.சி. ஓ’பிரையன்.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஹாலிவெல் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இங்கிலாந்து 70.4 ஓவர்களில் 185 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்ஸில் சுருண்டது. ஜேம்ஸ் மிடில்டன் என்ற தென் ஆப்பிரிக்க இடது கை மிதவேகப்பந்து வீச்சாளர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா 0/1 என்று முதல் நாளை முடித்தது.

அந்த 2ம் நாள்தான் பிப்.14, 1896. இந்த நாளில்தான் ஒரு டெஸ்ட் போட்டியில் என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அனைத்தும் நடந்தது. தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தின் ஜார்ஜ் ஆல்பிரட் லோமான் என்ற வலது கை வேகப்பந்து வீச்சாளரின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 93 ரன்களுக்குச் சுருண்டது.

லோமான் 38 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை ஆடியது, இப்போதுள்ள இங்கிலாந்து போலவே பின்வரிசை வீரர்கள் பங்களிப்புடன் இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் 80.4 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்தது. ஜேம்ஸ் மிடில்டன் தான் மீண்டும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

319 ரன்கள் வெற்றி இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் ஜார்ஜ் ஆல்பிரட் லோமான் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாகச் சரிந்து 18.4 ஓவர்களில் 30 ரன்களுக்குச் சுருண்டது. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆகக்குறைந்த ஸ்கோர் இதுவாகவே நீண்ட காலத்துக்கு இருந்தது.

லோமான் இந்த இன்னிங்சில் 9.4 ஒவர்கள் 5 மெய்டன், 7 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 94 பந்துகளில் (அப்போது ஓவருக்கு 5 பந்துகள்) 30 ரன்களுக்குச் சுருண்டது தென் ஆப்பிரிக்கா. இந்த இழிவிலிருந்து தென் ஆப்பிரிக்காவை விடுவித்தது நியூஸிலாந்து அணிதான், அந்த அணி 1954-55 தொடரில் 26 ரன்களுக்குச் சுருண்டு ஆகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோரை எடுத்து ஆட்டமிழந்தது.

7 ரன்களுக்கு 8 விக்கெட் என்பது லோமான் நிகழ்த்திய சாதனை. இதோடு ஹாட்ரிக் சாதனையையும் புரிந்தார் லோமேன். ஒரே நாளில் 29 விக்கெட்டுகள் விழுந்தன.

இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான லோமான் 18 டெஸ்ட் போட்டிகளில் 112 விக்கெட்டுகளைச் சாய்த்தவர், டெஸ்ட் ஒன்றுக்கு 6 விக்கெட்டுகளுக்கும் மேல் என்ற விகித்தில் வீழ்த்தியிருக்கிறார். முதல் தரக் கிரிக்கெட்டில் இவர் 293 போட்டிகளில் 1841 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவர் ஒரு சிறந்த ஸ்லிப் பீல்டர் என்று கூறப்படுகிறது. இவர் தனது 36 வயதில் மரணமடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x