Last Updated : 14 Feb, 2020 01:48 PM

 

Published : 14 Feb 2020 01:48 PM
Last Updated : 14 Feb 2020 01:48 PM

காப்பாற்றிய விஹாரி, புஜாரா: 4 பேட்ஸ்மேன் 'டக் அவுட்',3 பேர் ஒற்றை இலக்க ரன்: பயிற்சி ஆட்டத்சில் இந்திய அணி சொதப்பல்

ஹனுமா விஹாரியின் சதம், புஜாராவின் நிதான ஆட்டத்தால் ஹேமில்டனில் நடந்துவரும் நியூஸிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நியூஸி.லெவன் அணியுடன் இந்திய அணி 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

78.5 ஓவர்களில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் விஹாரி, புஜாரா கூட்டணி மட்டும் 195 ரன்கள் சேர்த்தனர் . மீதமுள்ள 9 விக்கெட்டுகளும் சேர்ந்து 68 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வீரர்கள் தங்களைத் தயார் செய்யும்விதமாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாகச் சொதப்பினர்.

இந்தியாவில் இருப்பது போன்று பேட்டிங்கிற்கு சாதமான ஆடுகளங்களில் விளையாடிப் பழகிய வீரர்கள், நியூஸிலாந்தில் வீசும் காற்று, வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளம், பவுன்ஸர் ஆகியவற்றை எதிர்கொள்ள இப்போது சிரமப்படுகின்றனர்.

நியூஸிலாந்து வீரர்களின் பவுன்ஸர்களையும், ஸ்விங் பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியது தெளிவாகத் தெரிந்தது.

தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா, சுப்மான் கில், விர்திமான் சாஹா, அஸ்வின் ஆகியோர் டக்-அவுட்டில் வெளியேறினர். ரிஷப்பந்த்(7), மயங்க் அகர்வால்(1), ரஹானே(18), ஜடேஜா(8) என சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 7 பேட்ஸ்மேன்களில் 4 பேர் டக்அவுட்டிலும், 3 பேர் ஒற்றை இலக்க ரன் மட்டுமே சேர்த்தார்கள்.

விஹாரி, புஜாராவும் விரைவாக ஆட்டமிழந்திருந்தால், இந்திய அணியின் கதை 100 ரன்களுக்குள் முடிந்திருக்கும்.

ரோஹித் சர்மா, தவண் இல்லாத நிலையில் அடுத்துவரும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் யாரை தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப் போகிறது இந்திய அணி என்பது குழப்பமாக இருக்கிறது.

இந்திய அணியில் 3 தொடக்க வீரர்களை டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. பிரித்வி ஷா, சுப்மான் கில், மயங்க் அகர்வால் என 3 பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு அளித்தும், நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்களையும், வேகத்தையும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, 5-வது விக்கெட்டுக்கு விஹாரி-புஜாரா கூட்டணி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஹனுமா விஹாரி 101 ரன்கள் சேர்த்து ரிட்டயர்ட் ஆகினார், புஜாரா 93 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் குகிலின் பந்துவீச்சில் பிரித்வி ஷா, சுப்மான் கில், மயங்க் அகர்வால் மூவரும் விக்கெட்டை பறிகொடுத்தார்கள். குகிலிகன் வீசிய முதல் ஓவரிலே பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். 15 ஓவர்களில் இந்திய அணி 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

அதேபோல இந்திய அணி 245 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹனுமா விஹாரி ரிட்யர்ட் முறையில் 6-வது வீரராக வெளியேறினார். அதன்பின் 18 ரன்களுக்குள் மீதமுள்ள 4 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.

ஒட்டுமொத்தமாக இந்திய அணி கடைசி 6 விக்கெட்டுகளை மிக மோசமாக 30 ரன்களுக்குள் இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப்பந்த், சுப்மான் கில், ரிஷப்ந்த், மயங்க் அகர்வால் என இளம் வீரர்கள் அனைவரும் சொதப்பியது வேதனை.

நியூஸிலாந்து தரப்பில் குகிலின், சோதி தலா 3 விக்கெட்டுகளையும், கிப்ஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x