

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தட்டிச் சென்றுள்ளார்.
இதன் மூலம் இந்த விருதை வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் 27 வயதான மன்பிரீத் சிங். 2019-ம்ஆண்டு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு மறக்க முடியாத வகையில் சிறப்பானதாக அமைந்திருந்தது. ஏனெனில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர்ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
விருதுக்கான தேர்வில் பெல்ஜியத்தின் வான் டோரன், அர்ஜென்டினாவின் லூக்காஸ் வில்லா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் மன்பிரீத் சிங்.மொத்தம் பதிவான வாக்குகளில் மன்பிரீத் சிங் 35.2 சதவீதமும், வான்டோரன் 19.7 சதவீதமும், லூக்காஸ் வில்லா 16.5 சதவீதமும் பெற்றனர்.
மன்பிரீத் சிங் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கிலும் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகமான அவர், இதுவரை 260 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.