

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்றுக்கான தரவரிசையில் இந்தியாவின் அமித் பங்கால் முதலிடம் பிடித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை மாதம் 24-ம் தேதி ஜப்பானின் டோக்கியோ நகரில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று ஆட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக ஆசிய அளவிலான தகுதி சுற்று ஜோர்டான் நாட்டில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
இந்தத் சுற்றுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் குத்துச்சண்டை பணிக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆடவருக்கான 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்காலுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு விஜேந்தர் சிங் 75 கிலோ எடைப் பிரிவு தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார்.
சுமார் 10 வருடங்களுக்குப் பிறகுஅந்த பெருமையை தற்போது அமித் பங்கால் பெற்றுள்ளார். 24 வயதான அமித் பங்கால்420 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இந்த தரவரிசையானது கடந்த இரு வருடங்களில் வீரர்,வீராங்கனைகள் உலக சாம்பியன்ஷிப் மற்றும் கண்டங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
அமித் பங்கால் கடந்த 2018-ம் ஆண்டு காமன்வெல்த், ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற கவிந்தர் சிங் பிஷ்ட் (57 கிலோ எடைப் பிரிவு) 190 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் கவுரவ் பிதுரி 32-வது இடத்திலும், 63 கிலோ எடைப் பிரிவில் மணீஷ் கவுசிக் 12-வது இடத்திலும், ஷிவா தாபா 36-வது இடத்திலும், மனோஜ் குமார் (69 கிலோ எடைப் பிரிவு) 71-வது இடத்திலும், ஆஷிஸ் 22-வது இடத்திலும் உள்ளனர்.
மகளிர் பிரிவு தரவரிசையில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம் (51 கிலோ எடைப் பிரிவு) 5-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய மேரி கோம் 225 புள்ளிகளை பெற்றுள்ளார்.
அதேவேளையில் 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
அமித் பங்கால் கூறும்போது, “தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது சிறந்த உணர்வை தருகிறது. தகுதி சுற்றில் இது உதவியாக இருக்கும். நம்பர் ஒன் வீரராக இருப்பது நம்பிக்கையை புதுப்பிப்பதாக உள்ளது. முதல் தகுதி சுற்றிலேயே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். - பிடிஐ