

காயத்துக்குப் பிறகு ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. அவரது பலமே விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் ஆனால் சமீபமாக அவரால் விக்கெட்டுகளை அவ்வளவாக கைப்பற்ற முடியவில்லை. காயமடையாமல் பாதுகாப்பாக வீசும் மனநிலைக்கு அவர் வந்து விட்டார் போல் தெரிகிறது.
ஸ்ட்ரெஸ்ஸ் பிராக்சர் காரணமாக கடந்த ஆண்டு 4 மாதங்கள் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியிருந்த பும்ரா நியூஸிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆடினார். ஆனால் 30 ஓவர்களில் 167 ரன்களைக் கொடுத்த அவர் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. குறிப்பாக அச்சுறுத்தும் மே.இ.தீவுகள் கார்னர் ரக பவுலராக இருந்த பும்ரா, தற்போது கடைசி கால மனோஜ் பிரபாகர் போல் வீசுவது கவலையளிக்கும் அம்சமாகும்.
இந்நிலையில் ஜாகீர் கான் அவருக்கு ஆலோசனை வழங்குகையில், பேட்ஸ்மென்கள் பும்ராவை கவனமாக ஆடக் கற்றுக் கொண்டு விட்டனர், எனவே பும்ரா இனி கூடுதல் முயற்சி மேற்கொள்வது அவசியமாகும் மேலும் அவர் ஆக்ரோஷத்தைக் கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“ஜஸ்பிரித் பும்ரா இத்தனையாண்டுகளாக தன் மதிப்பை உயர்த்திக் கொண்டுள்ள நிலையில் அதைத் தக்க வைக்க அவர் பாடுபடவேண்டும். அணிகள் என்ன கருதுகின்றன என்றால், ‘ஒகே 35 ரன்கள் எடுத்தாலும் பரவாயில்லை, பும்ராவிடம் விக்கெட்டுகளைக் கொடுக்காமல் இருந்தால் மற்ற பவுலர்களை அடித்து ஆடிக் கொள்ளலாம்’ என்று கருதுகின்றன.
இதனை பும்ரா புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவர் கூடுதல் ஆக்ரோஷத்துடன் வீசினால்தான் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும். அவர் கூடுதல் ரிஸ்குகள் எடுக்க வேண்டியுள்ளது.
எதிரணியினர் அவர் வீசும் போது தடுப்பு உத்தியைக் கையாள்வது அவருக்குத் தெரிகிறது என்றால், பேட்ஸ்மென்கள் தானாக தவறு செய்வார்கள் என்ற மனநிலைக்குத்தான் அவர் திரும்ப வேண்டிவரும், மாறாக அவர் விக்கெட்டுகளை வீழ்த்த வழிவகைகளைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டு.
பேட்ஸ்மென்கள் பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட்டுகள் பத்தியில் ஒன்றுமேயிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு பாரம்பரிய கிரிக்கெட் உத்தியைக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
மற்ற அணி வீரர்கள் இவரது பந்து வீச்சுக்கு மரியாதை அளிப்பது நல்ல அறிகுறி என்றாலும் பும்ரா அவர்களை விளையாட வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தவே முனைப்புக் காட்ட வேண்டும். அதாவது என் வேலை வெறுமனே பேட்ஸ்மனை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, என் பணி விக்கெட்டுகளை வீழ்த்துவதே என்பதை அவர் தனக்குத்தானே கூறி கொள்ள வேண்டும். ரன்கள் போனால் பரவாயில்லை, நான் முன்னிலை பவுலர் எனவே நான் தான் அங்கு ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனநிலை வேண்டும்” என்றார் ஜாகீர் கான்.