Last Updated : 13 Feb, 2020 04:35 PM

 

Published : 13 Feb 2020 04:35 PM
Last Updated : 13 Feb 2020 04:35 PM

முன்னாள் இந்திய வீரர்கள் பலர் சிக்குகிறார்கள்? சூதாட்ட இடைத்தரகர் சாவ்லா லண்டனில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்டார் : யார் இந்த சஞ்சீவ் சாவ்லா?

2000-ம் ஆண்டில் கிரிக்கெட் உலகை உலுக்கிய மேட்ச் பிக்ஸிங் வழக்கில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் சஞ்சீவ் சாவ்லா விரைவில் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு இன்று டெல்லி அழைத்து வரப்பட்டார்

சாவ்லாவிடம் நடக்கும் விசாரணையில் அவருடன் தொடர்புடைய இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், மே.இ.தீவுகள், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முன்னாள் வீரர்கள் பலர் சிக்குவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

2000-ம் ஆண்டு பிப்ரவரி 16 முதல் மார்ச் 20-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்க அணி மறைந்த கேப்டன் ஹேன்சே குரோனியே தலைமையில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தப் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க கேப்டன் குரோனியே இடைத்தரகரிடம் பணம் பெற்றுக் கொண்டு தன்னையும், சகவீரர்கள் சிலரையும் விட்டுக் கொடுத்து விளையாடுமாறு வற்புறுத்தி மேட்ச்பிக்ஸிங், ஸ்பாட்பிக்ஸிங்கில் ஈடுபட்டார் என்று தகவல் வெளியானது.

இதுதொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இந்த ஸ்பாட்பிக்ஸிங், மேட்ச்பிக்ஸிங் சூதாட்டத்தில் முக்கிய இடைத்தரகராக சஞ்சீவ் சாவ்லா இருந்ததை போலீஸார் கண்டுபடித்தனர். ஆனால், அவரை போலீஸார் கைது செய்யும் முன் லண்டனுக்கு தப்பிச் சென்றார். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று வாழ்ந்துவரும் சஞ்சீவ் சாவ்லா வாழ்ந்து வருகிறார்

2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் அப்போதைய தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹன்சே குரோனியே, இடைத்தரகர் சாவ்லா இருவரும் முக்கிய குற்றவாளிகளாக போலீஸாரால் கருதப்பட்டனர். இதில் ஹன்சி குரோனியே தன் மீதான தவறுகளையும் ஒப்புக்கொண்டு, பணம் பெற்று விளையாடியதையும் ஒப்புக்கொண்டார். அதன்பின் 2002-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் சிக்கி குரோனியே மரணமடைந்தார்.

ஆனால், சாவ்லா கிரிக்கட் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பழக்கம் உள்ளவர் என்பதில் இங்கிலாந்து அணியின் இரு வீரர்களையும் சூதாட்டத்தில் இணைத்துள்ளது அதன்பின் தெரியவந்தது.

இந்தவழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தவுடன் சாவ்லா லண்டன் தப்பிச் சென்றார். முதலில் சுற்றுலாவிசாவில் சென்று அதன்பின் குடியுரிமையை 2005-ம் ஆண்டு சாவ்லா பெற்றார். சாவ்லாவின் பாஸ்போர்ட்டை கடந்த 2000-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.

சூதாட்ட இடைத்தரகர் சஞ்சீவ் சாவ்லா

இந்த சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீஸார் 70 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் முக்கியக் குற்றவாளிகளாக குரோனியேவும், சாவ்லாவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

மத்திய அரசு அளித்த வேண்டுகோளின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி லண்டன் போலீஸார் சாவ்லாவை கைது செய்தனர். ஆனால், இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் டெல்லி போலீஸார் இறங்கினர். ஆனால், இந்தியாவில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை, சிறையில் போதுமான வசதிகள் இல்லை என்று சாவ்லா புகார் அளித்ததைத் தொடர்ந்து டெல்லி போலீஸாரிடம் லண்டன் அதிகாரிகள் அறிக்கை கேட்டனர்.இந்நிலையில் லண்டனில் இருந்து சாவ்லாவை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணிகள் அனைத்தையும் டெல்லி போலீஸார் முடித்து அழைத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி கிரைம் போலீஸார் தரப்பில் கூறுகையில், " சாவ்லா இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். அவரிடம் நடக்கும் விசாரணையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. ஏனென்றால், லண்டனில் உள்ள சாவ்லாவின் மாங்க் வில்லி அவென்யு இல்லத்துக்குப் பல இந்திய வீரர்கள் அடிக்கடி சென்றுள்ளனர். மேலும், சாவ்லாவின் தொலைப்பேசிக்கும் ஏராளமான வீரர்கள் பேசியுள்ளனர். அந்த பட்டியலையும் தயார் செய்துள்ளோம்.

ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் இருந்து சாவ்லா குறித்த ஏராளமான ஆவணங்களைத் திரட்டியுள்ளோம். இங்கிலாந்து வீரர்களைச் சூதாட்டத்தில் ஈடுபடுத்தி சாவ்லா சிக்கியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் அலெக் ஸ்டீவார்ட், லூயிஸ் போன்றோர் சாவ்லாவின் வலையில் சிக்கினார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர்கள் பலர் சாவ்லாவுடன் தொடர்பில் இருந்துள்ளார்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. லண்டனில் உள்ள கமர்ஷியல் ரோட் லண்டன் பகுதியில் உள்ள சாவ்லா வீட்டுக்கு பலர் சென்று வந்துள்ளனர் " எனத் தெரிவித்தனர்.

யார் இந்த சஞ்சீவ் சாவ்லா?

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் சாவ்லா கடந்த 1990களில் தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகளில் ஒருவராக இருந்தார். கிரிக்கெட் சூதாட்டத்தி்ல் தாவூர் இப்ராஹிம் வட்டத்தில்முக்கிய நபராக சஞ்சீவ் சாவ்லா இருந்தார்.

ஏராளமான தொழில்களை டெல்லியில் செய்து வந்த சாவ்லா, தாவுத் இப்ராஹிமின் சூதாட்ட நிறுவனத்தில் நெருக்கமாக இருந்தார். இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்களுடன் ரகசியமாகச் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு தாவுத் இப்ராஹிமின் டி கம்பெனியும், சோட்டா சஹீலும் ஏராளமான உதவிகளைச் செய்தனர்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கியவுடன், லண்டனுக்குதப்பிச் சென்ற சாவ்லா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் மனைவி தீபிகா, இரு மகன்களுடன் வசித்து வருகிறார். கிழக்கு லண்டனில் உள்ள கென்னிங்டன் நகரில் ஒரு ஹோட்டலும், கேட்டரிங் நிறுவனத்தையும் சாவ்லா நடத்தி வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1992-ம் ஆண்டு இந்தியா-இங்கிலாந்து இடையே நாடுகடத்தும் ஒப்பந்தங்கள் கையொப்பமானபின் லண்டனில் இருந்து நாடுகடத்தப்பட இருக்கும் 2-வது நபர் சஞ்சாவ் சாவ்லா என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x