Last Updated : 13 Feb, 2020 02:39 PM

 

Published : 13 Feb 2020 02:39 PM
Last Updated : 13 Feb 2020 02:39 PM

தொடக்க வீரர்களாக எனக்கும் பிரிதிவி ஷாவுக்கும் இடையே எந்த விதமான போட்டியும் இல்லை: ஷுப்மன் கில் பேட்டி

ரோஹித் சர்மா காயமடைந்ததையடுத்து மயங்க் அகர்வாலுடன் தொடக்க இடத்தில் இறங்குவதற்கு பிரிதிவி ஷாவா அல்லது ஏ தொடரில் இரட்டைச் சதத்துடன் மிகப்பிரமாதமாக ஆடிவரும் ஷுப்மன் கில்லா என்ற கேள்வி எழ அதற்கு ஷுப்மன் கில் ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.

கடினமான பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலையில் நியூஸி. ஏ அணிக்கு எதிராக ஷுப்மன் கில் ஒரு சதம் மற்றும் இரட்டைச் சதம் விளாசினார். இதனையடுத்து பிப்ரவரி 21ம் தேதி வெலிங்டனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் ஆட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தன்னையும், பிரிதிவி ஷாவையும் ஒப்பிட்டுப் பேசிய ஷுப்மன் கில், “எங்கள் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் ஒரே சமயத்தில் தொடங்கியது. ஆனால் எங்கள் இருவருக்குமிடையே யார் ஆடுவது என்பதில் போட்டியெல்லாம் ஒன்றுமில்லை.

நாங்கள் இருவருமே எங்கள் டவுனில் நன்றாக ஆடுகிறோம். எனவே அணி நிர்வாகம்தான் யாரைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும். இருவருக்குமிடையே ஏதோ சண்டை இருப்பது போன்றதல்ல இது. யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த வாய்ப்பை பெருமளவு பயன்படுத்தவே முயற்சிப்போம்.

அவர்களது பந்து வீச்சு ஷார்ட் பிட்ச் பந்துகளில் நிறைய விக்கெடுகளை கைப்பற்றுவதாகவே உள்ளது. குறிப்பாக நீல் வாக்னர். ஆஸ்திரேலியாவில் பார்த்த போது நீல் வாக்னர் உட்பட ஆஸி.க்கு எதிராக ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியையே நம்பியிருந்தனர்.

எனவே ஷார்ட் பிட்ச் பந்துகளில் நாம் மடியாமல் இருந்தால் நிச்சயம் நல்ல இன்னிங்ஸை ஆட முடியும் என்றே கருதுகிறேன்.

நியூஸிலாந்து மைதானங்களில் வீசும் காற்று ஆட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றும். குறிப்பாக பேட் செய்யும் போது காற்று நம் கவனத்தை திசைத்திருப்பும். காற்று வீசும் திசையைப் பொறுத்து பவுலர்கள் திட்டமிடுவார்கள். காற்று வீசும் நிலைமைகளில் சீராக புல் ஷாட், ஹூக் ஷாட் போன்றவைகளை ஆட முடியாது.

என்னை தொடக்கத்தில் இறங்கச் சொன்ன போது எனக்கு இது புதிதாகத் தெரியவில்லை. 4ம் நிலையில் இறங்கும் போது ஏற்கெனவே 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் நிச்சயம் வேறு வகையான சூழ்நிலைதான், அழுத்தம் அதிகமிருக்கும்.

தொடக்க வீரராக இறங்கும் போது ஒட்டுமொத்த அணிக்காகவும் நாம் ஆட்டத்தை அமைத்துக் கொடுக்க முடியும். எனவே இது வேறுபட்டது. தொடக்க வீரர்கள் அமைத்துக் கொடுக்கும் அடித்தளத்தில் மற்ற வீரர்கள் இன்னிங்ஸ்களை கட்டமைக்கலாம்.

மிடில் ஆர்டரில் இறங்கும் போது 2வது புதிய பந்தை எடுக்கும் போது விஷயமே வேறு, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் இங்கு இருப்பதை விட ஸ்விங் அதிகம். நியூஸிலாந்தில் பந்தும் சற்றே வித்தியாசமாக உள்ளது, ஆனால் இங்கிலாந்தில் ஸ்விங் பிட்ச்களில் அவர்கள் பந்து வீச்சை எதிர்கொள்வதுதான் அதிக சவாலானது.

பிட்ச்கள் இங்கு பேட்டிங் செய்ய நன்றாகத்தான் உள்ளன, குறிப்பாக கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில், ஒரே சவால் பிட்சின் பவுன்ஸ்தான் சிக்கல். உடல்தகுதி அளவில் சரியாக வைத்துக் கொண்டால் நீண்ட இன்னிங்ஸ்களை ஆட முடியும், உடற்தகுதி சரியாக அமைந்தால் களைப்பு ஏற்படாது” என்றார் ஷுப்மன் கில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x