

முத்தரப்பு டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்விஅடைந்தது.
மெல்பர்னில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. பெத் மூனி 54 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் விளாசினார். ஆஷ்லே கார்ட்னர் 26, மேக் லானிங் 26 ரன்கள் சேர்த்தனர்.
19 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 136 ரன்களே எடுத்திருந்தது. ஆனால் கடைசி ஓவரை வீசிய ராஜேஷ்வரி கெய்க்வாட் 19 ரன்களை தாரை வார்த்ததால் ஆஸ்திரேலிய அணி வலுவான இலக்கை கொடுத்தது. இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி சர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
155 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வலுவாகவே இருந்தது. 6 ஓவர்களில் வெற்றிக்கு 45 ரன்களே தேவையாக இருந்த நிலையில் ஜெஸ் ஜோனாசென் சுழலில் இந்திய அணி ஆட்டம் கண்டது. அபாரமாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசிய நிலையில் ஜோனாசென் பந்தில் நிக்கோலா கேரியின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கர்மான்பிரீத் கவுர் (14), அருந்ததி ரெட்டி (0), ராதா யாதவ் (2), தானியா பாட்டியா (11) ஆகியோரையும் ஜோனாசென் பெவிலியனுக்கு திருப்ப இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
29 ரன்களுக்கு 7 விக்கெட்கள்
இந்திய அணி தனது கடைசி 7 விக்கெட்களை 29 ரன்களுக்கு தாரை வார்த்திருந்தது. 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மகளிர் அணி கோப்பையை வென்றது. ஜோனாசென் 4 ஓவர்களை வீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.