Published : 13 Feb 2020 10:22 AM
Last Updated : 13 Feb 2020 10:22 AM

ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை இழந்தார் பும்ரா: பேட்டிங்கில் கோலி முதலிடத்தை தக்கவைத்தார்

ஐசிசி-யின் ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதேவேளையில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தை இழந்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி869 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விராட் கோலி 75 ரன்கள் மட்டுமே சேர்த்த போதிலும் அது தரவரிசையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ரோஹித் சர்மா (855), பாபர் அஸம் (829) முறையே 2, 3-வது இடங்களில் உள்ளனர். நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் 828 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ராஸ் டெய்லர் 194 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்து தொடரில் பும்ராவின் பந்து வீசசு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது. 3 ஆட்டங்களிலும் மொத்தமாக 30 ஓவர்களை வீசிய பும்ரா 167 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (701), தென் ஆப்பிக்காவின் காகிசோ ரபாடா (674), ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (673) ஆகியோர்முறையே 3 முதல் 5-வது இடங்களில் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் மொகமது நபி முதலிடத்தை பிடித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x