

ஆஷஸ் தோல்விக்கு மைக்கேல் கிளார்க் மீது பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜான் புகானன் தன் பங்குக்கு மைக்கேல் கிளார்க் மீது விமர்சனம் வைத்து ஷேன் வார்னின் வார்த்தைத் தீயிற்கு இலக்காகியுள்ளார்.
அதாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டுக்கு கிளார்க் குந்தகம் ஏற்படுத்திவிட்டார் என்றும், அவர் அணிக்குள் நுழைந்த போது, மேத்யூ ஹெய்டனும், ஜஸ்டின் லாங்கரும் ஓய்வறையில் கிளார்க்குக்கு ஆஸி. கிரிக்கெட் பண்பாடு என்றால் என்ன என்பதைப் பற்றி பாடம் எடுக்க வேண்டியிருந்தது என்றும் ஆதிக்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் புகானன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜான் புகானனின் விமர்சனங்களுக்கு ஷேன் வார்ன் சேனல்-9-ல் பதிலடி கொடுத்தார்.
"ஜான் புகானன் போன்றவர்கள் இத்தருணத்தில் மலிவான தாக்குதல்களைத் தொடுப்பது வேடிக்கையாக உள்ளது.
ஜான் புகானன், உங்களுக்கு கிரிக்கெட் ஆட்டம் பற்றி ஒன்றும் தெரியாது. நீங்கள் விளையாடியதேயில்லை, வீரர்களிடத்தில் என்ன நடக்கிறது என்பதும் உங்களுக்குப் புரியாது. ஆனால் நீங்கள் திடீரென ‘கிளார்க்கினால் பேகி கிரீன் பண்பாடு கெட்டுவிட்டது’ என்கிறீர்கள்.
இது மிகவும் அவமரியாதையான, இழிவான கருத்து.
ஒரு முறை ஜான் புகானனிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது: ஒரு நல்ல பயிற்சியாளராக இருப்பது என்றால் என்ன? அணி பயிற்சியாளரை உருவாக்குகிறதா அல்லது பயிற்சியாளர் அணியை உருவாக்குகிறாரா? என்று அவரிடம் கேட்ட போது, அவர், “நான் இதற்கு பதில் கூற மறுக்கிறேன்” என்றார்.
எனவே முழுமுற்றான உயரத்திலிருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம்.
மைக்கேல் கிளார்க் ஒரு அருமையான கேப்டன். அவர் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதை மிகவும் நேசிப்பவர். அவர் கீழ் உருவான வீர்ர்களைப் பாருங்கள், ஸ்மித், ஜான்சன், வார்னர் இவர்கள் அனைவரும் அருமையான வீரர்கள்.
ஆஸ்திரேலிய அணி அவரது கேப்டன்சியின் கீழ் என்ன செய்தது என்பதைப் பாருங்கள். 2 டெஸ்ட்களில் தோற்றதற்காக கண்டதையும் அவர் மீது விட்டெறியாதீர்கள்” என்றார்.