Published : 11 Feb 2020 02:16 PM
Last Updated : 11 Feb 2020 02:16 PM

அரிய மைல்கல்: தோனியை சமன் செய்த ராகுல்; திராவிட் சாதனையும் சமன் -  சதம் மூலம் உடைத்த சாதனைகள்

மவுண்ட் மாங்குனியில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைக்க இந்திய அணி ராகுலின் அபாரமான சதத்துடன் 50 ஓவர்களில் 296/7 என்ற ஸ்கோரை எட்டியது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக சதம் கண்ட கே.எல்.ராகுல் 113 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 112 ரன்களை கடினமான சூழ்நிலையில் எடுத்து சில சாதனைகளைப் புரிந்துள்ளார்.

அதாவது கட்டாக்கில் தோனி இங்கிலாந்துக்கு எதிராக 2017-ம் ஆண்டு இதே 5ம் நிலையில் இறங்கி 134 ரன்கள் எடுத்த பிறகு இதே 5ம் நிலையில் இறங்கி கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக சதம் கண்டு தோனியை ஒரு அரிய மைல்கல்லில் சமன் செய்தார்.

இந்த தொடரில் பிரமாதமான பார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் 3 அரைசதங்களுடன் தற்போது ஒரு சதமும் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் தன் 4வது சதத்தை 31 இன்னிங்ஸ்களில் எடுத்தது மூலம் கோலி, சேவாக், கம்பீர் போன்ற ஜாம்பவான்களை விடவும் விரைவில் 4வது சதம் எடுத்துள்ளார். ஷிகர் தவண் 24வது இன்னிங்சில் 4 சதங்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல் விக்கெட் கீப்பராக ராகுல் திராவிட் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசியாவுக்கு வெளியே சதம் எடுத்ததற்குப் பிறகு ராகுல் தற்போது விக்கெட் கீப்பராக ஒரு சதம் ஆசியாவுக்கு வெளியே எடுத்து ராகுல் திராவிடை சமன் செய்துள்ளார்.

62/3 என்ற நிலையில் அய்யருடன் (62) இணைந்த ராகுல் பிரமாதமாக ஆடி 100 ரன்கள் கூட்டணி அமைத்தனர். 66 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட ராகுல் பிறகு 104 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதம் கண்டார்.

மணீஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்து உறுதுணையாக ஆட ராகுல் சதம் கண்டதோடு இருவரும் 107 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இந்த இரண்டு கூட்டணிகளும் ராகுல் சதமும் இந்திய அணியை சவாலான 296 ரன்களுக்குக் கொண்டு சென்றது.

தற்போது நியூஸிலாந்து 34 ஓவர்களில் 193/4 என்று ஆடி வருகிறது, கேன் வில்லியம்சன், அபாய வீரர் ராச் டெய்லர் ஆட்டமிழந்த நிலையில் வெற்றி பெற ஓவருக்கு 6.63 ரன்கள் தேவைப்படும் நிலையில் டாம் லேதம், நீஷம் ஆடி வருகின்றனர். இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x