Published : 11 Feb 2020 08:25 AM
Last Updated : 11 Feb 2020 08:25 AM

வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ராவல்பிண்டியில் நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 233 ரன்களும், பாகிஸ்தான் 445 ரன்களும் எடுத்தன. 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 3-வது நாள் ஆட்டத்தில் 45 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.

தமிம் இக்பால் 32, சைப் ஹசன் 16, நஜ்முல் ஹொசைன் 38, தைஜூல் இஸ்லாம் 0, மஹ்மதுல்லா 0, மொகமது மிதுன் 0 ரன்களில் நடையை கட்டினர். 16 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான நஷீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். மொமினுல் ஹக் 37, லிட்டன் தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 90 நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்த நிலையில் 62.2 ஓவர்களில் 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மொமினுல் ஹக் 41, ரூபல் ஹொசைன் 5, லிட்டன் தாஸ் 29, அபு ஜயத் 3 ரன்களில் வெளியேறினர். பாகிஸ்தான் அணி சார்பில் நஷீம் ஷா, யாசீர் ஷா ஆகியோர் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 எனமுன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக நஷீம் ஷா தேர்வானார். வங்கதேச அணி கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 10-வது தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் கடந்த 14 மாதங்களில் அந்த அணி 6-வது தோல்வியை கண்டுள்ளது. இதில் 5 முறை இன்னிங்ஸ் தோல்வியை பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்கதேச அணி இதுவரை ஒரு புள்ளிகளை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x