Published : 11 Feb 2020 08:18 AM
Last Updated : 11 Feb 2020 08:18 AM

நியூஸி.க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: ஒயிட்வாஷை தவிர்க்குமா இந்திய அணி?

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கனுயி நகரில் உள்ளபே ஓவல் மைதானத்தில் இன்று காலை நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள்கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த இந்த அணி தொடரை ஏற்கெனவே இழந்துவிட்டது. ஹாமில்ட்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வீழ்ந்திருந்தது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனமாக காணப்பட்டது. ஆனால் 2-வது ஆட்டத்தில் பந்து வீச்சு மேம்பட்ட நிலையில் பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினர். இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் இன்றுஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

தொடரை ஏற்கெனவே இழந்துவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இது நிகழும் பட்சத்தில் மயங்க் அகர்வால், கேதார் ஜாதவ்நீக்கப்படக்கூடும். மேலும் அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியை கருத்தில் கொண்டு ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு மொகமது ஷமி களமிறக்கப்படலாம்.

நியூஸிலாந்து அணியானது டி 20 தொடரில் அடைந்த ஒயிட்வாஷ் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில்வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டக்கூடும். கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால் இன்று களமிறங்க வாய்ப்பு உள்ளது.

அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் வயிற்று உபாதை காரணமாக பாதிக்கப்பட்ட டிம் சவுதிக்கு ஓய்வுஅளிக்கப்படும் என தெரிகிறது. இந்தியாவுக்கு எதிராக 6 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டித் தொடரை வெல்வதில் முக்கிய பங்கு வகித்த ராஸ் டெய்லரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இன்றைய ஆட்டம் நடைபெறும் பே ஓவல் மைதானத்தில் கடந்த 2019-ம்ஆண்டு தொடரின் போது நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்தியஅணி வெற்றி பெற்றிருந்தது. அதேபோன்று மீண்டும் ஒரு முறை சிறப்பாக செயல்பட்டால் ஆறுதல் வெற்றி பெற்று ஒயிட்வாஷ் பெறுவதை தவிர்க்கலாம்.

நேரம்: காலை 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x