Last Updated : 10 Feb, 2020 04:57 PM

 

Published : 10 Feb 2020 04:57 PM
Last Updated : 10 Feb 2020 04:57 PM

வரலாறு படைத்த யு-19 உலகக்கோப்பை சாம்பியன்களுக்கு ‘கிராண்ட்’ வரவேற்பு: வங்கதேச அரசு முடிவு  

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற யு-19 உலகக்கோப்பை சாம்பியன்களான வங்கதேச இளையோர் அணிக்கு பெரிய அளவில் பொது வரவேற்பு அளிக்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய யு-19 அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வொர்த் முறையில் வென்று வங்கதேச அணி முதல் முறையாக ஐசிசி கோப்பையை நாட்டுக்குப் பெற்றுத்தந்து வரலாறு படைத்தது. ஆனால் வங்கதேச இளம் வீரர்கள் அளவுக்கதிகமாக சற்று நாகரீகத்தை மீறி வெற்றியைக் கொண்டாடியது பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் ஷேய்க் ஹசினா தலைமை அமைச்சரவை இன்று கூடி பெரிய வரவேற்பு அளிக்க திட்டமிடும் முடிவை மேற்கொண்டது.

இதுவரை வங்கதேசத்தின் எந்த அணியும் பெரிய கோப்பையை வென்றதில்லை என்பதே இந்த கொண்டாட்டத்துக்குக் காரணமாகும்.

இந்திய அணிக்கும் வங்கதேசத்துக்கும் எப்போதும் ஆகாது, 2007 உலகக்கோப்பையில் இந்திய அணியை விரைவில் வெளியேற்றியதையடுத்து வங்கதேச ஊடகங்கள், ரசிகர்கள் இந்திய அணியை கேலியும் கிண்டலும் செய்தது தெரிந்ததே. 2011-ல் சேவாக், கோலி சதங்களுடன் பதிலடி கொடுத்ததும் கொஞ்சம் அடங்கினர், ஆனால் அதன் பிறகு தோனி தலைமையில் அங்கு சென்று இந்திய அணி தோற்றபோது மீண்டும் கேலியும் கிண்டலும் தலைதூக்க 2015 உலகக்கோப்பைக் காலிறுதியில் ரோஹித் சர்மா அவுட் ஆன பந்துக்கு நடுவர் இடுப்புக்கு உயரமாக வந்ததென்று நோ-பால் கொடுக்க தோல்விக்கு இதனைக் காரணமாக காட்டி வங்கதேச கிரிக்கெட் வாரியம் முதல் வீரர்கள், ரசிகர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வந்தது, இதில் ஐசிசியை இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று கேலி பெயர் சூட்டியதும் அடங்கும்.

இந்நிலையில்தான் நேற்று யு19 இந்திய அணியை வீழ்த்தி விட்டு தாறுமாறாக வங்கதேச வீரர்கள் அதனைக் கொண்டாட, அது கொண்டாட்டத்தையும் தாண்டிய வெறுப்புணர்வு என்பதாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால் வங்கதேச கேப்டன் அக்பர் அலி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார், இந்திய கேப்டன் கார்க், ‘இப்படிப்பட்ட துரதிர்ஷ்டம் நடந்திருக்கக் கூடாது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x