Published : 10 Feb 2020 03:52 PM
Last Updated : 10 Feb 2020 03:52 PM

விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய சாதனை பவுலர்: கோலியின் பலவீனம் என்ன? சவுத்தி பதில்

விராட் கோலியை ஆக்லாந்தில் பிரமாதமாக நெருக்கி அவரது சாதக ஷாட்டான ‘ராஜ கவர் ட்ரைவ்’-ஐ முடக்கி நிறைய அவுட் ஸ்விங்கர்களுக்குப் பிறகு ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்து பவுல்டு செய்தார் டிம் சவுத்தி.

இதனுடன் 3 வடிவங்களிலும் கோலியை 9 முறை ஆட்டமிழக்கச் செய்த ஒரே பவுலராக டிம் சவுத்தி திகழ்கிறார். பொதுவாகவே விராட் கோலியை முடக்கினால் அதிலிருந்து அவர் சச்சின், சேவாக், லஷ்மண் போல் மீண்டு வருபவர் அல்ல, மேலும் மீளுதல் முயற்சியும் ‘ஹை ரிஸ்க்’ முயற்சியாகவே இருந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம். அன்று கவர் ட்ரைவை முடக்கியவுடன் அந்தப் பந்துகளை தூக்கி அடிக்க முயற்சி செய்யாமல், லெக் திசையில் ஆட நினைத்து சொதப்பினார் கோலி.

உள்ளே வரும் பந்தை ‘அக்ராஸ்’ ஆடுவது அபாயகரமானது. ஆனால் ரன்களுக்காக கோலி அப்படிச் செய்தார், அது கைகொடுக்கவில்லை, தன்னை ஆதிக்கம் செலுத்த சச்சின் அனுமதிக்க மாட்டார், அப்படி ஆதிக்கம் செலுத்துவது போல் தெரிந்தால் சச்சின், மேலேறி வந்து தாக்குதல் ஆட்டம் ஆடுவதைத்தான் பார்த்திருக்கிறோம் அந்த வகையில் கோலி, சச்சினைத் தாண்டி விட முடியாது. இதுவரை தாண்டவில்லை. ரிச்சர்ட் ஹாட்லி முதல் கார்ட்னி வால்ஷ், கிளென் மெக்ரா, ஆலன் டொனால்டு, ஸ்டெய்ன், பொலாக், நிடினி, மோர்கெல் ஷேன் வார்ன், முரளிதரன் வரை சச்சின் டெண்டுல்கர் தன் ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.

அதனால்தான் சச்சினையும் கோலியையும் வெறும் ரன்கள் அடிப்படையில் வைத்து ஒப்பிட முடியாது.

இந்நிலையில் 9 முறை விராட் கோலியை வீழ்த்திய டிம் சவுத்தி கூறும்போது, “கோலி நிச்சயமாக ஒரு தரமான வீரர், அவரிடம் பலவீனங்கள் இல்லை. புதிய பந்தில் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் உள்ளிட்ட சாதக அம்சங்கள் இருந்தன. சரியான இடத்தில் பந்தின் தையலைப் பிட்ச் செய்தால் எவ்வளவு பெரிய பேட்ஸ்மெனாக இருந்தாலும் சில சந்தேகங்கள், கேள்விகளை எழுப்பவே செய்யும். எனவே இது பிட்சின் உதவி என்பதுதான் சரியாக இருக்கும்.

நம் பணி விக்கெட்டுகளை வீழ்த்துவதே, விராட் கோலி ஒரு கிரேட் பிளேயர், பெரிய பார்மில் இருக்கிறார். குறிப்பாக இலக்கை விரட்டுவதில் தனித்துவமானவர். எனவே அவரை வீழ்த்தி அவரை பெவிலியன் அனுப்பவதே மகிழ்ச்சியானதாகும். ஆனால் அதிக முறை நான் அவரை வீழ்த்தியிருக்கிறேன் என்பது எனக்கு அப்போது சத்தியமாகத் தெரியாது.

ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளிலும் பவுலிங்கிற்கு சாதகமான ஆட்டக்களங்களையே விரும்புகிறோம். பிட்சில் பவுலர்களுக்கு உதவி இருந்தால் அது நன்றாகத்தானே இருக்கும்” என்றார் சவுத்தி.

(பிடிஐ தகவல்களுடன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x