Last Updated : 09 Feb, 2020 01:43 PM

 

Published : 09 Feb 2020 01:43 PM
Last Updated : 09 Feb 2020 01:43 PM

முதல்பந்திலேயே பவுண்டரி: 5 ஆண்டுகளுக்குப்பின் களமிறங்கிய சச்சின்; எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்றார்

5 ஆண்டுகளுக்குப்பின் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் : படம் உதவி ட்விட்டர்

மெல்போர்ன்

ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று 5 ஆண்டுகளுக்குப்பின் பேட்டுடன் களத்தில் இறங்கிய லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார்.

சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய துளையை, வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றது. அந்த இடத்தை நிரப்ப என்னும் ஒருவரும் வரவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் மீண்டும் கால்காப்பு, பேட்டுடன் களமிறங்கமாட்டாரா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர் காட்சிப் போட்டியில் களமிறங்கினால்கூட அவரின் பேட்டிங்கைக் காண அரங்கம் ரசிகர்களால் நிறைந்துவிடும். கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்ற சச்சின் மீண்டும் பேட்டை தொடமாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் இன்று காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்குப் பயிற்சியாளராக சச்சின் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த சூழலில் இந்த போட்டிக்கு நடுவே, டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ளத் தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் சச்சினிடம் விளையாட்டாகச் சவால் விட்டிருந்தார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ள டெண்டுல்கர், தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும், ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்யத் தயார் எனப் பதிவிட்டார்.

இதன்படி இடைவேளையின் போது அனைத்து ரசிகர்களின் பார்வையும் பெவிலியனை நோக்கித்தான் இருந்தது. எப்போது சச்சின் வழக்கமான கால்காப்பு, பேட், ஹெல்மெட் ஆகியவற்றுடன் வருவார் எனக் காத்திருந்தனர்.

இந்த போட்டியில் தான் சார்ந்திருக்கும் ரிக்கிபாண்டிங் அணியின் மஞ்சள் நிற உடையை அணிந்து சச்சின் டெண்டுல்கர், வழக்கமான உற்சாகத்துடன் மைதானத்துக்குள் வந்தார்.

சச்சினை 5 ஆண்டு கால இடைவேளைக்குப்பின் கையில் பேட்டுடன் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் காதை பிளக்கும் வகையில் சத்தமிட்டனர்.

எல்லிஸ் பெர்ரி முதல் பந்தை வீச, " நான் இன்னும் ஃபார்ம்லதான் இருக்கேன் " என்பதை சொல்லும் வகையில் தனது வழக்கமான பிளிக் ஷாட்டில் பைன்லெக் திசையில் தட்டிவிட்டு பவுண்டரி அடித்தார். அதன்பின் மீதமுள்ள மூன்று பந்துகளை டிபன்ஸ் ஷாட்களாக சச்சின் ஆடினார். கடைசி இரு பந்துகளை வீராங்கனை சதர்லாந்து வீசினார்.

சச்சின் டெண்டுல்கரை கையில் பேட்டுடன், 5 ஆண்டுகளுக்குப்பின் களமிறங்கி வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x