முத்தரப்பு டி 20 கிரிக்கெட்: ஆஸி.யை வென்றது இந்திய மகளிர் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20-ல் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20-ல் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா.
Updated on
1 min read

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. ஆஷ்லே கார்ட்னர் 57 பந்துகளில், 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 93 ரன்களும், மெக் லேனிங் 22 பந்துகளில் 37 ரன்களும் விளாசினர். இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், ஷஃபாலி வர்மா 28 பந்துகளில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 49 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் விளாசினர்.

கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 20, தீப்தி சர்மா 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்கால் இருந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய மகளிர் அணி தலா 2 தோல்வி, 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அந்த அணி 3 ஆட்டங்களில் இரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலிய அணி தோல்வி கண்டால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் இருக்காது.

மாறாக இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் 3 அணிகளுமே தலா 4 புள்ளிகளை பெறும். இந்த சூழ்நிலை ஏற்பட்டால் ரன் ரேட் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் தேர்வு செய்யப்படும். 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆஸ்திரேலிய அணி 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in