Published : 09 Feb 2020 12:03 PM
Last Updated : 09 Feb 2020 12:03 PM

புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்திய அணி: 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி

ஆடவருக்கான புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-வது நிமிடத்தில் இந்தியாவின் மன்தீப் சிங் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி விரைவாக 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்தடுத்த நிமிடங்களில் பெல்ஜியம் அணிக்கு 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இதை கோல்களாக மாற்றும் பெல்ஜியம் வீரர்களின் திறனுக்கு இந்திய அணி முட்டுக்கட்டை போட்டது.

26-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த அற்புதமான வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. 31-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் வான் அபுல் மிக நெருக்கமாக கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். எனினும் அடுத்த 2-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது.

33-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பெல்ஜியத்தின் போக்கார்ட் கோல் அடித்திருந்தார். அடுத்த நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஹர்மான்பிரீத் சிங் அடித்த பந்தை பெல்ஜியம் தற்காப்பு வீரர்கள் அற்புதமாக தடுத்தனர்.

47-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை ராமன்தீப் சிங் கோலாக மாற்ற இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. 59-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு மற்றுமொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பெல்ஜியம் அணி கோல்கீப்பர் நீக்கப்பட்டு சாதாரண வீரராக விளையாடிக் கொண்டிருந்தார்.

இதனால் பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி எளிதாக கோலாக மாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் கோல் அடிக்கும் முயற்சியை பெல்ஜியம் தற்காப்பு வீரர்கள் முறியடித்தனர். 2 விநாடிகளே இருந்த நிலையில் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தை டிரா செய்ய கடைசி வாய்ப்பாக அமைந்த இந்த தருணத்தை அந்த அணி சரியாக பயன்படுத்தத் தவறியது.

முடிவில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தியது. இந்திய அணியின் வெற்றியில் கோல் கீப்பர்களான பதக், ஜேஷ் ஆகியோரின் பங்கு அளப்பரியதாக இருந்தது. இவர்கள் பலமுறை பெல்ஜியம் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை தகர்த்திருந்தனர். இரு அணிகளும் இதே மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x