

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 0-5 ஒயிட்வாஷ் வாங்கிய நியூஸிலாந்து அணி தாங்கள் ஒருநாள் தொடரில் சிறந்த அணி என்பதை நிரூபிக்கும் விதமாக 3 போட்டிகள் கொண்ட தொடரி 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
நேற்று ஆக்லாந்தில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் குறைந்த இலக்கைத் தடுத்து வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி, இதனையடுத்து 3வது போட்டியிலும் வென்று ஒயிட் வாஷ் அளிக்க திட்டமிட்டிருப்பதாக நியூஸிலாந்தின் கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நிச்சயமாக இது ஒரு பெரிய வெற்றிதான். முதல் ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மென்கள் வெற்றி பெற்றுக் கொடுக்க, 2வது போட்டியில் பவுலர்கள் வெற்றிபெறச் செய்தனர்.
273 ரன்கள் ஓகேதான். இந்தப் பிட்ச் ஒரு வேடிக்கையான பிட்ச். இந்திய டாப் ஆர்டர் வரிசையை வீழ்த்தினோம் பிறகும் பவுலர்கள் விக்கெட்டுகளை சீராக வீழ்த்தி கொண்டே இருந்தனர்.
இந்தியாவுடன் நெருக்கமான முடிவுகள் கொண்ட சில போட்டிகளை ஆடி வருகிறோம், வெற்றி பெறுவதில் மகிழ்ச்சியே. டிம் சவுத்திக்கு உடம்பு முடியவில்லை. கைல் ஜேமிசன் அறிமுகப் போட்டியிலேயே தன்னால் என்ன முடியும் என்பதைக் காட்டியுள்ளார், இங்கிருந்து 3-0 என்று வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும், நிச்சயம் வெல்வோம் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒவ்வொரு போட்டியிலிருந்தும் கற்றுக் கொண்டிருக்கிறோம்” என்றார் லேதம்.