Last Updated : 08 Feb, 2020 02:45 PM

 

Published : 08 Feb 2020 02:45 PM
Last Updated : 08 Feb 2020 02:45 PM

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை

மான்செஸ்டர்

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சகவீரர்களை மேட்பிக்ஸிங், ஊழலில் ஈடுபடத் தூண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஜாம்ஷெட் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் இருவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரிட்டிஷ் நேஷனல் கிரைம் ஏஜென்ஸி விசாரித்து வந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு வங்கதேச சூப்பர் லீக், 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சகவீரர்களை மேட்ச் பிக்ஸிங், ஊழலில் ஈடுபடத் தூண்டியதாக ஜாம்ஷெட் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2017- பிப்ரவரி மாதம் ஜாம்ஷெட், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூசுப் அன்வர்(36), முகமது இசாஜ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட அன்வர், இஜாஸ் இருவரும் பாகிஸ்தான் வீரர்களுக்குப் பணம் கொடுத்து மோசமாக விளையாடத் தூண்டினோம், மேட்ச்பிக்ஸிங் ஈடுபட முயன்றோம் எனும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனால், இஜாசுக்கு 30 மாதங்களும், அன்வருக்கு 40 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டியில் தான் மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என்று தொடக்கத்தில் கூறிவந்த ஜாம்ஷெட் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் வீரர்களிடையே கையூட்டு பெறுவதை ஊக்கப்படுத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஜாம்ஷெட் தடைவிதிக்கப்பட்டார். அதற்கு முன்பாக 2017-ம் ஆண்டில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த குற்றத்துக்காக 12 மாதங்கள் தடையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் இடதுகை பேட்ஸ்மேனான ஜாம்ஷெட் 2 டெஸ்ட், 48 ஒருநாள் போட்டிகளிலும், 18 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 48 ஒருநாள் போட்டிகளில் 1418 ரன்களும் சேர்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x