Published : 08 Feb 2020 08:19 AM
Last Updated : 08 Feb 2020 08:19 AM

புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியம் - இந்தியா இன்று பலப்பரீட்சை

புரோ ஹாக்கி லீக்கில் இன்று மாலை 5 மணிக்கு புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய ஆடவர்ஹாக்கி அணி, உலக சாம்பியனான பெல்ஜியத்துடன் மோதுகிறது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் புரோ ஹாக்கி லீக்கில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கடந்த மாதம் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தது. இரு ஆட்டங்கள் கொண்ட இந்த மோதலில் முதல்ஆட்டத்தில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

அதேவேளையில் 2-வது ஆட்டம் 3-3 என டிரா ஆன நிலையில் ஷூட்-அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது இந்திய அணி. இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் உலக சாம்பியனான பெல்ஜியம் இரு மோதல்களில் (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக தலா இரு ஆட்டங்கள்) பங்கேற்று 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் இன்றைய ஆட்டத்தை நம்பிக்கையுடன் சந்திக்கிறது இந்திய அணி. அதேவேளையில் கடந்த 2018-ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வாகை சூடிய பெல்ஜியம் அணி மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் களமிறங்குகிறது.

‘ரெட் லயன்ஸ்’ என அழைக்கப்படும் அந்த அணி சமீபத்தில் உலக தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருந்தது. இந்தத் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி கண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தை டிராவில் முடித்தாலும் ஷூட்-அவுட்டில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு எதிரான மோதல்கள் குறித்து பெல்ஜியம் அணியின் கேப்டன் தாமஸ் பிரையல்ஸ் கூறும்போது, “இந்திய அணி மிகவும் கூர்மையாக உள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தினர்.

இதனால் எங்களுக்கு எதிரான இரு ஆட்டங்களும் வலுவான மோதலாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்திய அணி கொடுக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளோம். இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக எங்களது ஆட்டத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.

இன்றைய மோதல் நடைபெறும் கலிங்கா மைதானத்தில் இரு அணிகளும் 10 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெல்ஜியம் 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.

நேரம்: மாலை 5

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x