

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீ நிவாரண நிதிக்காக சிட்னி நகரில் நடத்தப்படவிருந்த கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த பெரிய அளவில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதை முழுமையாக அணைக்க முடியவில்லை.
இந்நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கிரிக்கெட் போட்டி ஒன்றை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அமைப்பு நடத்த முடிவு செய்தது. இந்தப் போட்டியானது சிட்னி நகரில் பிப்ரவரி 8-ம் தேதி நடத்தப்பட இருந்தது. ஆனால் அன்றைய தினத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து போட்டியானது மெல்பர்ன் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் தேதியும் மாற்றப்பட்டுள்ளது. 8-ம் தேதிக்கு பதிலாக 9-ம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு புஷ்பயர் கிரிக்கெட் பேஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
போட்டியில் ரிக்கி பான்டிங் லெவன் அணியும், ஷேன் வார்னிங் லெவன் அணியும் மோதவுள்ளன. ரிக்கி பான்டிங் லெவன் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வார்னே லெவன் அணிக்கு மேற்கிந்தியத் தீவு அணியின் முன்னாள் கேப்டன் கோர்ட்னி வால்ஷும் பயிற்சியாளர்களாக செயல்படவுள்ளனர்.
இந்த போட்டியானது 10 ஓவர்கள் கொண்டதாக இருக்கும். 5 ஓவர்களுக்கு பேட்டிங் பவர்பிளே இருக்கும்.
இந்தப் போட்டியில் முன்னாள் வீரர்கள் பிரையன் லாரா, யுவராஜ் சிங், வாசிம் அக்ரம், ஜஸ்டின் லேங்கர், மேத்யூ ஹேடன், ஷேன் வாட்சன், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ், பிராட் ஹாடின், பிரெட் லீ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். - பிடிஐ