Published : 06 Feb 2020 10:06 AM
Last Updated : 06 Feb 2020 10:06 AM

ஹீரோ ஐ லீக் கால்பந்து: இந்தியன் ஏரோஸ் அணியை வென்றது சென்னை சிட்டி எஃப்.சி.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற ஹீரோ ஐ-லீக் கால்பந்துப் போட்டியில் கோல் கம்பத்துக்குள் பந்தைச் செலுத்த முயலும் சிசிஎஃப்சி வீரர் கட்சுமி யூசா. படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் நேற்று நடைபெற்ற `ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டித் தொடரில், இந்தியன் ஏரோஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது சென்னை சிட்டி எஃப்.சி. அணி.

ஏற்கெனவே 8 போட்டிகளில் விளையாடி, இரு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த சென்னை சிட்டி எஃப்.சி. அணி நேற்று கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ஏரோஸ் அணியுடன் மோதியது.சில நாட்களுக்கு முன் மோகன் பகான் அணியுடன் ஆவேசமாக மோதியும், தோல்வியைத் தழுவியதால், இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் சிசிஎஃப்சி அணி ஆவேசமாக களமிறங்கியது.

எனினும், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே தற்காப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தின. ஆட்டம் தொடங்கிய 44-வதுநிமிடத்தில் சிசிஎஃப்சி-யின் கட்சுமி யூசா பந்தைக் கடத்தி வந்து, எதிரணியின் கோல்போஸ்ட் அருகே அடால்ஃப் மிரண்டாவுக்கு தட்டிவிட்டார். ஆனால், இதை அவர் கோலாக மாற்றத் தவறிவிட்டார். இடைவேளை வரை இரு அணிகளும் கோல்போடவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் 49-வது நிமிடத்தில் கட்சுமி யூசா, தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தலையால் தட்டியே கோல் போட்டார். இதனால் சென்னை சிட்டி எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ன்னர் இரு அணிகளும் கடுமையான முயன்றும், எந்த அணி வீரர்களாலும் கோல்போடவில்லை. கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கியும் கோல் விழவில்லை.

இதையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் சிசிஎஃப் அணி வெற்றி பெற்றது. ஒரு கோல் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த கட்சுமி யூசா, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வரும் 12-ம் தேதி இரவு 7 மணியளவில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் கோகுலம் கேரளா அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x