

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஹேமில்டனில் இன்று நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 63 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்து அதிகமான ரன்கள் குவித்தவர்களில் கங்குலி 148 போட்டிகளில் 5,082 ரன்கள் சேர்த்து 3-வது இடத்தில் இருந்தார்.
விராட் கோலி இந்தப் போட்டியில் 51 ரன்கள் சேர்த்ததன் மூலம், 87 போட்டிகளில் 5,123 ரன்கள் சேர்த்து கங்குலியின் சாதனையை முறியடித்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கேப்டனாக இருந்த கோலி 21 சதங்களையும், 23 அரைசதங்களையும் அடித்துள்ளார். விராட் கோலி தனது சராசரியாக 76 ரன்கள் வைத்துள்ளார்.
முன்னாள் கேப்டன் தோனி ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 6,641 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 5,239 ரன்கள் சேர்த்து 2-வது இடத்தி்ல் உள்ளார்.
உலகளவில் பார்த்தால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 230 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 8,497 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். அதனைத்தொடர்ந்து தோனியும், நியூஸி வீரர் ஸ்டீபென் பிளெம்மிங்(6,295), இலங்கை வீரர் அர்ஜுனா ரணதுங்கா(193 போட்டிகள் 5608) ரன்கள் குவித்துள்ளனர்
இதற்கிடையே நியூஸிலாந்துக்கு எதிராக இன்று நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரன்கள் வாரிய வழங்கிய வள்ளல் பட்டியலில் இணைந்துள்ளார்.
இன்று நடந்த போட்டியில் குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 84 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் அதிகமான ரன்களை வாரி வழங்கிய 3-வது இந்திய சுழற்பந்துவீச்சாளர் எனும் மோசமான பெயரை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார்.
இதில் இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சாஹல்தான் முதலிடத்தில் உள்ளார். சஹல் 88 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டை எடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் வழங்கியுள்ளார். மூன்றாவது இடத்தில் குல்தீப் யாதவ் 84 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மோசமான மூன்றாவது பந்துவீச்சாளர் என்று தெரியவந்துள்ளது. 4-வது இடத்தில் ஜடேஜா 80 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மோசமான பந்துவீச்சாளர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்