

ஹேமில்டனில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 80 சதவீதம் அபராதமாக விதித்து போட்டி நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய அணிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐசிசி போட்டி நடுவர் அபராதத்தை விதித்துள்ளார்.
ஹேமில்டனில் இன்று நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. 348 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 348 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்து வீசாமல் இந்திய வீரர்கள் அதிகமான நேரம் பந்து வீசுவதற்கு எடுத்துக்கொண்டதாக ஐசிசி போட்டி நடுவரிடம் கள நடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். அதாவது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் 50 ஓவர்களை வீசாமல் 46 ஓவர்கள் மட்டுமே வீசினர். இதையடுத்து, இந்திய அணிக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 80 சதவீதம் அபராதமாக ஐசிசி விதித்தது.
ஐசிசி ஒழுங்கு நடத்தைவிதி 2.22 பிரிவை மீறியதால் இந்திய அணியின் வீரர்கள், வீரர்களின் உதவி ஊழியர்கள் ஆகியோருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், "நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பந்து வீசாமல் அதிகமான நேரம் எடுத்துக்கொண்ட குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஏற்றுக்கொண்டார். தங்களின் அணியின் தவறை உணர்ந்து அபராதம் விதிப்பதைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஆதலால், முறைப்படியான விசாரணை ஏதும் தேவையில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, 4-வது டி20 போட்டியின் போது பந்து வீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டமைக்கு 40 சதவீதம் அபராதமும், 5-வது டி20 போட்டியில் 20 சதவீதம் அபராதமும் ஐசிசி விதித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணிக்குத் தொடர்ந்து 3-வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.