

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணி பரம வைரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இரு அணிகளும் தோல்விகளை சந்திக்காமல் அரை இறுதியில் கால்பதித்துள்ளன. கால் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியிருந்தன. பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் அடித்து பேட்டிங்கில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். கால் இறுதி ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர்த்து மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட தவறிய போதிலும் பின்கள வரிசை வீரர்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினர்.
7-வது விக்கெட்டுக்கு அதர்வாஅங்கோலேகர், ரவி பிஷ்னோய்ஜோடி 61 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்திருந்தது. அதேவேளையில் பந்து வீச்சில் கார்த்திக் தியாகி அற்புதமாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். அதேபோன்று இன்றைய ஆட்டத்திலும் கார்த்திக்தியாகி சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
பாகிஸ்தான் அணியில் கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக இடம் பெற்ற ஹூரைரா 64 ரன்கள் விளாசி கவனத்தை ஈர்த்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். வேகப்பந்து வீச்சில் அப்பாஸ் அப்ரீடி, மொகமது அமிர் கான், தஹிர் ஹூசைன் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக்கூடும்.
நேரம்: பிற்பகல் 13.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்