

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். இவர் 8-வது முறையாக பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
மெல்பர்னில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஜோகோவிச் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியா வீரர் டோமினிக் தீமை வென்றார். முதல் செட்டை வென்ற ஜோகோவிச், அடுத்த செட்களையும் இழந்தார். இருப்பினும் கடைசி 2 செட்களிலும் சுதாரித்து ஆடி கைப்பற்றினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 8-வது முறையாக அவர் கைப்பற்றியுள்ளார். மேலும் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.
இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் அவர் 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும் (20 பட்டங்கள்), ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் (19 பட்டங்கள்) உள்ளனர். மேலும் பட்டம் வென்றதன் மூலம் டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் அவர் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஜோகோவிச் தற்போது 8 ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களையும், 5 விம்பிள்டன் பட்டங்களையும், 3 அமெரிக்க ஓபன் பட்டங்களையும், ஒரு பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். அதே நேரத்தில் டோமினிக்தீம் 3 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய போதும், ஒரு முறை கூட அவரால் பட்டம் வெல்ல இயலவில்லை. - பிடிஐ