Last Updated : 02 Feb, 2020 05:45 PM

 

Published : 02 Feb 2020 05:45 PM
Last Updated : 02 Feb 2020 05:45 PM

அமர்க்களம்; டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி: நியூஸி.யை 5-0 'வொயிட்வாஷ்' செய்தது கோலிப் படை

பும்ரா, ஷைனி, தாக்கூரின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து பெறும் 8-வது வெற்றியாகும்.

4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தத் தொடரில் 224 ரன்கள் சேர்த்த ராகுல் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தாக்கூர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் அவரும் காயத்தால் வெளியேறவே ராகுல் தலைமையில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாகக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

இந்திய அணி மூன்றாவது முறையாக எதிரணியை டி20 தொடரில் வொயிட்வாஷ் செய்துள்ளது. இதற்கு முன் 2019-ல் மே.இ.தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கிலும், 2016-ல் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கிலும் வொயிட் வாஷ் செய்தது. ஆனால் முதல் முறையாக 5-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்தது இதுதான் முதல் முறையாகும்.

நியூஸிலாந்து மண்ணில் இதுவரை பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருமுறை கூட டி20 தொடரை வென்றதில்லை என்ற பெயருடன் இந்தமுறை நியூஸி.மண்ணில் கால் பதித்தது. ஆனால், கோலிப் படையின் ஆர்ப்பரிப்பான ஆட்டத்தால், அந்தக் குறை நீங்கி புதிய வரலாற்றைப் பதிவு செய்தது.

இங்கு வந்தபோது 3-8 என்ற கணக்கில் டி20 தொடரில் இந்தியா, பின்தங்கி இருந்தது. ஆனால், தொடரை முடிக்கும்போது, நியூஸிலாந்துக்கு இணையாக 8-8 என்ற கணக்கில் இந்திய அணி முடித்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் உலகத்தரம் என்பதை நிரூபித்தனர். இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்த வெற்றி இந்திய அணியை மேலும் கூர்மைப்படுத்தும்.

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 164 ரன்களுக்குள் சுருட்டுவது என்பது கடினமான பணிதான். ஆனால், பும்ரா, ஷைனியின் அபாரமான பந்துவீச்சு நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தது. அதிலும் சவுதிக்கு பும்ரா வீசிய 'யார்க்கர்' பந்துவீச்சு சிலிர்க்க வைத்துவிட்டது.

அதேபோல ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாகப் பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்கள். இதில் ஷிவம் துபேவுக்கு மட்டும் ஓவர்கள் வழங்காமல் இருந்திருந்தால் 34 ரன்களைச் சேமித்திருக்கலாம். அந்த ஓவரை சுந்தரை வீசச் செய்திருக்கலாம். துபே ஓவரை ராஸ் டெய்லர் நொறுக்கி அள்ளிவிட்டார்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ராகுல் வழக்கமாக தூண்கள் போல் செயல்பட்டனர். சாம்ஸன் இந்த முறையும் கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார். நடுவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே தங்கள் பங்களிப்பைச் செய்தார்கள்.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் முக்கிய வீரர்கள் டிரண்ட் போல்ட், கடைசி இரு போட்டிகளில் வில்லியம்ஸன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவுதான்.

ஆனாலும், நியூஸிலாந்து அணி தங்கள் மண்ணில் டி20 தொடரை இழப்பது என்பது சற்று பரிதாபத்துக்குரியதாகும். பிளெம்மிங் காலத்தில், வெட்டோரி காலத்தில் இருந்த நம்பிக்கையற்ற அணியாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்தத் தொடர் முழுவதும் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீச்சும் இல்லை, பேட்டிங்கும் இல்லை. இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் கடைசி வரை அதைத் தக்கவைக்க முடியாத "சோக்கர்ஸ்" போன்று இருந்தனர்.

இந்த ஆட்டத்திலும் 114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் வலிமையாக இருந்து நியூஸிலாந்து அணி. ஆனால், அடுத்த 18 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடிக்குள் சென்றது. நடுவிரிசையிலும், கடைசி வரிசையிலும் நின்று விளையாடும் பேட்ஸ்மன்கள் இல்லை.

இந்தப் போட்டியில் கூட ராஸ் டெய்லர் 53, ஷீபெர்ட் 50 ரன்கள் எடுக்காவிட்டால் நியூஸிலாந்து அணியின் நிலை பரிதாபமாக இருந்திருக்கும். ராஸ் டெய்லருக்கு இது 100-வது டி20 ஆட்டமாக அமைந்தது.

164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே பும்ரா அதிர்ச்சி அளித்தார். பும்ரா வீசிய 2-வது ஓவரில் கப்தில் கால்காப்பில் வாங்கி 2 ரன்களில் வெளியேறினார். முன்ரோ 15 ரன்களில் சுந்தர் பந்துவீச்சில் போல்டாகினார். ப்ரூஸ் ரன் ஏதும் சேர்க்காமல் ரன் அவுட்டாகினார். 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து அணி தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு ஷீபர்ட், டெய்லர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். அவ்வப்போது சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினர். குறிப்பாக துபே வீசிய 10-வது ஓவரில் டெய்லர் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி, நோபாலில் 5 ரன்கள் என 34 ரன்கள் விளாசினார்.

ஷீபெர்ட் 29 பந்துகளிலும், டெய்லர் 42 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர். அதன்பின் நிலைக்காத ஷீபெர்ட் 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஷைனி பந்துவீச்சில் சாம்ஸனிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு டெய்லர், ஷீபெர்ட் 99 ரன்கள் சேர்த்தனர்.

114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக நியூஸிலாந்து இருந்தது. ஆனால், அடுத்துவந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். மிட்ஷெல் (2), சான்ட்னர் (6), குகிலின் (0), டெய்லர் (53) என வெளியேற நியூஸிலாந்தி்ன் தோல்வி உறுதியானது.

தாக்கூர் வீசிய 17-வது குகிலின், சான்ட்னர் என இரு விக்கெட்டுகள் வீழ்ந்து திருப்புமுனையாக அமைந்தது. பும்ரா வீசிய யார்க்கரில் சவுதி 6 ரன்னில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. சோதி 2 சிக்ஸர்கள் விளாசியும் வெற்றியைத் தொட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷைனி, தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ராகுலுடன், சாம்ஸன் ஆட்டத்தைத் தொடங்கினார். வழக்கம் போல் சாம்ஸன் களத்தில் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

அதிரடியான ஷாட்களை ஆடி ஆட்டமிழக்கும் சாம்ஸன் இந்த முறை குகிலின் பந்துவீச்சில் சான்ட்னருக்கு கேட்ச் பயிற்சி அளித்துவிட்டு 2 ரன்களில் வெளியேறினார். சாம்ஸனுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளித்தும் அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்னும் பேட்டிங்கில் பொறுப்பில்லாமல் ஷாட்களை ஆடுவதும், அவசரப்பட்டு ஷாட்களை ஆடி விக்கெட்டை இழந்து முதிர்ச்சியற்ற வீரர் என்பதைக் காட்டுகிறார்

8 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த ரோஹித் சர்மா, ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் வழக்கம் போல் நியூஸிலாந்து பந்துவீச்சைப் பதம் பார்த்தனர். பவுண்டரி சிக்ஸர்கள் என விளாச ஸ்கோர் வேகமெடுத்தது. பவர் ப்ளே ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி. இருவரும் அரை சதத்தை நெருங்கினர்.

ராகுல் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது பெனட் பந்துவீச்சில் கவர் திசையில் நின்றிருந்த சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராகுல் கணக்கில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதன்பின் சிறிதுநேரமே களத்தில இருந்த நிலையில் ரோஹித் சர்மாவின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் ரோஹித் வெளியேறினார். ரோஹித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இதில் சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து வந்த ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் அய்யருடன் சேர்ந்தார். துபே 5 ரன்களில் குகிலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே களமிறங்கி ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாட முயன்றும் பந்துகள் சரியாக சிக்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் பல முறை சில ஷாட்களை அவர் அடிக்க முயன்றும் அது தவறிப்போனது.

ஸ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களிலும், மணிஷ் பாண்டே 11 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்து தரப்பில் குகிலின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x