

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியா கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின், போட்டித் தரவரிசையில் இடம் பெறாத ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை எதிர்த்து விளையாடினார்.
இரு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுக்கு உரியவரும் உலகத் தரவரிசையில் 32-வது இடம் வகிக்கும் முகுருசா முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரு செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய சோபியா கெனின் 6-2, 6-2 என தன்வசப்படுத்தினார்.
ரூ.29 கோடி பரிசு
முடிவில் 2 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21 வயதான சோபியா கெனின் 4-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்றுசாம்பியன் பட்டத்தை வென்றார். சோபியா கெனினுக்கு இது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்தது. சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் உலக தரவரிசை பட்டியலில் சோபியா கெனின் 7-வது இடத்தை பிடிக்க உள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற சோபியா கெனின் கோப்பையுடன் சுமார் ரூ.29.45 கோடி பரிசுத் தொகையை பெற்றார். 2-வது இடம் பிடித்த கார்பைன் முகுருசாவுக்கு
ரூ.14.75 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
வெற்றி குறித்து சோபியா கெனின் கூறும்போது, “எனது கனவு அதிகாரப்பூர்வமாக நிறைவேறி உள்ளது. இந்த உணர்வுகளை என்னால் விவரிக்க முடியவில்லை. இது ஆச்சரியமாக உள்ளது, கனவு நினைவாகி உள்ளது. கனவுகளை கொண்டிருந்தால் அதன் வழியே பயணம் செல்லுங்கள், அது மெய்ப்படும். கடந்த இரு வாரங்கள் என் வாழ்க்கையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அனைவருக்கும் எனது அடி மனதில் இருந்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவு
கலப்பு இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா, குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி இறுதி சுற்றில் 5-7, 6-4, 10-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேத்தானி மெடக், இங்கிலாந்தின் ஜெமி முரே ஜோடியை வீழ்த்தியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ஒற்றையர் பிரிவு ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்த்து விளையாடுகிறார்.
இன்றைய மோதல்
ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒவ்வொரு முறையும் அவர், வாகை சூடியுள்ளார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய ஓபனை அதிக முறை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் ஜோகோவிச்.
டொமினிக் தீம், ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் விளையாடுவது இதுவே முதன்முறை. மேலும் தீம் இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றது இல்லை. அதிகபட்சமாக பிரெஞ்சு ஓபனில் இரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் தோல்வி கண்டிருந்தார்.