Published : 01 Feb 2020 08:15 AM
Last Updated : 01 Feb 2020 08:15 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் டொமினிக் தீம்

இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஹங்கேரியின் டிமா பாபோஸ், பிரான்சின் கிறிஸ்டினா மிலடெனோவிக் ஜோடி. படங்கள்: ஏஎப்பி

மெல்பர்ன்

ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர்ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும்இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை தீம் 3-6 என இழந்தார்.

ஆனால் அடுத்த 3 செட்களிலும் ஆக்ரோஷமாக விளையாடிய டொமினிக் தீம் 6-4, 7-6 (7-3), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். முடிவில் 3 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டொமினிக் தீம் 3-6, 6-4, 7-6 (7-3), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் டொமினிக் தீம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2017, 2018-ம் ஆண்டுகளில் 4-வது சுற்று வரை சென்றிருந்தார் டொமினிக் தீம். நாளை நடைபெறும் இறுதிச் சுற்றில் 2-ம் நிலை வீரரானசெர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் தீம்.

இரட்டையர் பிரிவு

மகளிர் இரட்டையர் பிரிவில்ஹங்கேரியின் டி பாபோஸ், பிரன்சின் கிறிஸ்டினா மிலடெனோவிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி இறுதிச் சுற்றில் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் முதல் நிலை ஜோடியான சீன தைபேவின் சூ வெய், செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவை வீழ்த்தியது.

இன்றைய மோதல்

மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அமெரிக்காவின் 14-ம்நிலை வீராங்கனையான சோபியாகெனின், 32-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை சந்திக்கிறார்.

முகுருசா ஏற்கெனவே இரு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். எனினும் தற்போதுதான் முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதி சுற்றில்விளையாடுகிறார். அதேவேளையில் சோபியா கெனிக்கு இதுவே முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x