Published : 31 Jan 2020 09:25 AM
Last Updated : 31 Jan 2020 09:25 AM

மோகன் பகான் அணியுடன் இன்று சென்னை சிட்டி பலப்பரீட்சை

ஐ லீக் கால்பந்து தொடரில் கோவை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும்மோகன் பகான் அணியுடன்சென்னை சிட்டி எப்சி மோதுகிறது.

நடப்பு சாம்பியனான சென்னைசிட்டி அணிக்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சிட்டி 2 வெற்றி, 2 டிரா,3 தோல்விகளுடன் 8 புள்ளிகள்பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மோகன் பகான் அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 20 புள்ளிகளை வேட்டையாடி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

கடந்த சீசனில் மோகன் பகான் அணிக்கு எதிராக மோதிய இரு ஆட்டங்களிலும் சென்னை சிட்டி அணி தோல்வியை சந்திக்கவில்லை. கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சென்னைஅணி கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தை 1-1 என்றகோல் கணக்கில் டிரா செய்திருந்தது. ஆனால் இம்முறை தடுமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கும் சென்னை சிட்டி அணிக்கு இன்றைய மோதல் கடும் சவாலாகவே இருக்கக்கூடும்.

ஏனெனில் தொடர் பாதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்சென்னை சிட்டி அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதேவேளையில் மோகன் பகான் 7 ஆட்டங்களில் வீழ்த்த முடியாத அணியாக திகழ்ந்துள்ளது. மேலும் அந்த அணியின் பார்ம் இந்த சீசனில் உயர்மட்ட நிலையில் உள்ளது. 17 கோல்களை அடித்துள்ளமோகன் பகான் அணி 7 கோல்களை மட்டுமே வாங்கியுள்ளது.

சென்னை சிட்டி அணி இந்தசீசனில் 12 கோல்களை வாங்கியுள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் கிழக்கு பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி அணி வீழ்ந்திருந்தது. இதனால் டிபன்ஸ் ஆட்டத்தை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் பலப்படுத்த வேண்டியது அவசியம்.

இன்றைய ஆட்டத்தில் மோகன்பகான் வீரர்களான பாபா தியாவரா, ஜோசெபா பீட்டியா, நாங்டம்பா நோரெம், பிரான் கோன்சலஸ் ஆகியோர் சென்னை அணியின் டிபன்டர்களுக்கு கடும் சவால்தரக்கூடும்.

மிரான்டா

சென்னை சிட்டி அணியின் நடுகள வீரரான அடோல்போ மிரான்டா கூறும்போது, “மோகன் பகான் அணிக்கு எதிராக நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. படிப்படியாக முன்னேறி புள்ளிகள் பட்டியலில் ஏற்றம் காண்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x