Last Updated : 06 Aug, 2015 04:30 PM

 

Published : 06 Aug 2015 04:30 PM
Last Updated : 06 Aug 2015 04:30 PM

இந்திய ஹாக்கியின் ஒலிம்பிக் வரலாற்றுப் பொக்கிஷத்தை தொலைத்த அவலம்

இந்திய ஒலிம்பிக் ஹாக்கி நாயகன் பல்பீர் சிங் சீனியர் 1985-ம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு அளித்த விலைமதிப்பற்ற ஹாக்கி ஒலிம்பிக் வெற்றி நினைவுச் சின்னங்களின் கதி என்னவென்று அறியாத நிலையில் உள்ளது,

இந்திய விளையாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா) அருங்காட்சியகம் ஒன்றுக்காக இதனை அன்பளிப்பாக அளித்துள்ளார் ஹாக்கி லெஜன்ட் பல்பீர் சிங் சீனியர். ஆனால் அந்த அருங்காட்சியகம் இன்னமும் வரவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தேசிய விளையாட்டு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த கேட்டதையடுத்து, மும்முறை ஒலிம்பிக் தங்க நாயகனான பல்பீர் சிங் சீனியர் 1985-ம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கங்கள், வெற்றிச் சின்னங்கள் ஆகியவற்றை அன்பளிப்பாக அப்போதைய இந்திய விளையாட்டு ஆணைய செயலரிடம் அளித்திருந்தார்.

நாட்டின் இளைஞர்களுக்கு தூண்டுகோலாக அமைய இந்த பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள் உதவும் வகையில் டெல்லியில் அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது என்று அப்போது பல்பீர் சிங் சீனியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் அருங்காட்சியகம் சார்பாக இந்திய ஹாக்கி ஒலிம்பிக் பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள் தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது ஒலிம்பிக் அருங்காட்சியகத்தாருக்கு கிடைக்கவில்லை, காரணம் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு பல்பீர் சிங் அளித்த பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள் எங்கு சென்றது என்றே தெரியவில்லை.

ஓராண்டு முன்னதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சண்டிகரில் உள்ள பல்பீர் சிங் சீனியர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இது குறித்து கேட்ட போது விளையாட்டுத் துறை அமைச்சருக்கு தெரியவில்லை, ஆனால் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனிடையே பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திய விளையாட்டு ஆணைய புதுடெல்லி அலுவலகம், பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகம், ஆகியவைப் பற்றி தகவலுரிமை சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்ற போது திடுக்கிடும் உண்மைகள் பல கிடைத்துள்ளன.

இந்த தகவலுரிமை தகவல்களில் பல்பீர் சிங் சீனியர் பதக்கங்களையும் விலைமதிப்பில்லா நினைவுச் சின்னங்களையும் அளித்ததன் ஒப்புதல் தெரியவந்துள்ளது.

தன்னுடைய ஒலிம்பிக் பதக்கம் மற்றும் பத்மஸ்ரீ விருது தவிர, அவருடைய கேப்டனின் மெல்போர்ன் ஒலிம்பிக் பிளேசர், 1958 டோக்கியோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெள்ளிப் பதக்கம் உட்பட 36 பதக்கங்கள், நூற்றுக்கணக்கான அரிதான புகைப்படங்கள் ஆகியவற்றை 91 வயது பல்பீர் சிங் சீனியர் இந்திய விளையாட்டுக் கழகத்திடம் கையளித்துள்ளார்.

இது குறித்து பல்பீர் சிங்கின் பேரன் கபீர் போமியா கூறும்போது, “மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளின் பிளேசர் லண்டன் ஒலிம்பிக் கண்காட்சியில் வைக்கக் கோரப்பட்டது. 116 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் பல்வேறு விளையாட்டுத் துறைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 முன்னாள் பதக்க வீரர்களில் பல்பீர் சிங் சீனியர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லண்டன் ஒலிம்பிக்கில் இந்த அரிய நிகழ்வுக்கு தாத்தாவின் அன்பளிப்பு என்னவாயிற்று என்று இந்திய விளையாட்டு ஆணையத்திடம் கேட்டபோது அவர்கள் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்று பதில் அளித்தனர்” என்றார்.

1952 போட்டிகளின் போது நெதர்லாந்துக்கு எதிரான தங்கப் பதக்க போட்டியில் 6-1 என்று இந்தியா வென்றது. இதில் பல்பீர் சிங் 5 கோல்களை அடித்தார்.

முக்கிய பொக்கிஷங்கள் தொலைந்து போயுள்ளது பற்றி சமூகவியலாளரும் பல்பீர் சிங்கின் அசோசியேட் பேராசிரியருமான சுதேஷ் குப்தா கூறும் போது, “இது ஒரு அவமானம்! இந்த வெற்றி நினைவுச் சின்னங்கள் அனைத்தும் நம் நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தின் பொக்கிஷங்கள். இந்தியா உற்பத்தி செய்த ஒரு மகா வீரர் பல்பீர் சிங்கின் நினைவுச் சின்னங்கள், பதக்கங்களுக்கு இந்த கதி ஏற்படுகிறது என்றால், இது ஏதோ வெறும் அலட்சியம் என்று மட்டும் கூற முடியவில்லை.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய விளையாட்டின் மகத்துவமிக்க வரலாற்று நினைவுகளை களவாடும் சதியுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது, இதற்குக் காரணமானவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வது அவசியம்” என்றார்.

இது தொடர்பாக முதல் ஆர்டிஐ மனு டிசம்பர் 9, 2014 அன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள், அரிய புகைபப்டங்கள் பற்றி இந்திய விளையாட்டு ஆணையத்திடம் கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. இதற்கு ஜனவரி 5, 2015-ல் தகவலுரிமை ஆணையம் பதில் அனுப்பியது., அதில், முதலில் நேரு ஸ்டேடியத்தில் தேசிய விளையாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் திட்டமில்லை என்ற அதிர்ச்சியூட்டும் பதில் கிடைத்தது. பிறகு பல்பீர் சிங்கிடமிருந்து எந்த ஒரு பொருளையும் பெறவில்லை என்ற மேலும் அதிர்ச்சிகரமான பதில் கிடைத்துள்ளது.

டிசம்பர் 19, 2014- அன்று வழக்கறிஞர்கள் சிலர் பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்துக்கு தகவலுரிமை மனு அனுப்பினர். அதற்கு ஜனவரி 2, 2015-ல் வந்த பதிலில் 74 பக்கங்களுக்கு என்னென்ன பொருட்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்ற பட்டியல் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதில் பல்பீர் சிங் அன்பளிப்பாக கொடுத்த பதக்கங்கள், அரிய புகைப்படங்கள், வெற்றி நினைவுச் சின்னங்கள் ஆகியவை பற்றி குறிப்பிடப்படவில்லை.

கடைசியாக, இந்திய விளையாட்டு ஆணையத்தின் அப்பலேட் ஆணையரிடம் மீண்டும் தகவலுரிமை மனு செய்யப்பட்டது. இதற்கான பதில் மார்ச் 19,2015-ல் வந்தது. இதில் பல்பீர் சிங்கிடமிருந்து 1956 ஒலிம்பிக் பிளேசர், ஜே.எல். நேரு ஸ்டேடிய அதிகாரிகள் பெற்றது குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தகவல் பெற நேரு ஸ்டேடிய அதிகாரிகள் அலுவலகத்தில் இன்னொரு ஆர்டிஐ மனு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில் ஜூன் 8, 2015 அன்று வந்தது. இதில் முந்தைய பட்டியல் இடம்பெற்றதோடு பல்பீர் சிங்கிடமிருந்து பிளேசரைப் பெற்றதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த பிளேசர் தவிர, பல்பீர் சிங் வென்ற 36 பதக்கங்கள், நூற்றுக்கணக்கான அரிய வரலாற்றுப் புகைப்படங்கள் ஆகியவை எங்கு சென்றது என்பது பற்றி தெரியவில்லை.

இந்நிலையில் பல்பீர் சிங் சீனியர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மற்றும் ஆர்டிஐ மனு செய்த ஆர்வலர்கள் தேசிய விளையாட்டின் பொக்கிஷமான சில நினைவுச் சின்னங்கள், புகைப்படங்கள், வெற்றிப் பதாகைகள் காணாமல் போயுள்ளது பற்றி அதிர்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x