

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் நடால் காலிறுதிப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடந்தன.
இதில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை எதிர்த்து மோதினால் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தியம்.
பரபரப்பாக 4 மணிநேரம் 10 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் நடாலை 7-6(3), 7-6(4), 4-6, 7-6(6) என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து அரையிறுதிக்கு டோமினிக் தியம் முன்னேறினார்.
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கடந்த 7 ஆண்டுகளாக விளையாடி வரும் டோமினிக் தியம்முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
பிரெஞ்சு ஓபனில் இதற்கு முன் நடாலுக்கு எதிராக விளையாடி இருமுறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்துள்ளார் டோமினிக் தியம். அதேசமயம், கடந்த 2016-ம் ஆண்டில் நடாலுக்கு எதிராக ஒரே ஒருமுறை மட்டும் தியம் வென்றிருந்தார். அதன்பின் 3 ஆண்டுகளுக்குப்பின் நடாலை ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் டோமினிக் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய 2-வது ஆஸ்திரிய வீரர் டோமினிக் தியம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் தாமஸ் மஸ்டர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டோமினிஸ் தியம், முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் போராடி டைபிரேக்கரில் வென்று நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின், 2-வது செட்டையும் டைபிரேக்கர் வரை சென்று தியம் தனதாக்கினார்.3-வது செட்டை நடால் கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நடால் இருந்தார்.
ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் விளையாடிய தியம், 4-வது செட்டையும் டைபிரேக்கர் வரை சென்று 7-6 என்றகணக்கில் கைப்பற்றி நடாலை வெளியேற்றினார்.
அரையிறுதியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸான்டர் ஜெர்வுடன் மோதுகிறார் டோமினிக்.