Published : 29 Jan 2020 08:22 AM
Last Updated : 29 Jan 2020 08:22 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் ஜோகோவிச், பெடரர்- மகளிர் பிரிவில் ஆஷ்லே பார்டி அசத்தல்

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில்நோவக் ஜோகோவிச், ரோஜர்பெடரரும், மகளிர் பிரிவில்ஆஷ்லே பார்டி, சோபியாகெனினும் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6 (7-1) என்ற நேர் செட் கணக்கில் 32-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரவோனிச்சை வீழ்த்தினார். அரை இறுதியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை சந்திக்கிறார் ஜோகோவிச்.

பெடரர் தனது கால் இறுதி சுற்றில், 100-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெனிஸ் சாண்ட்கிரெனை போராடி வீழ்த்தினார். முதல் செட்டை பெடரர் 6-3 எனகைப்பற்றினார். ஆனால் அடுத்த இருசெட்களையும் 6-2, 6-2 என கைப்பற்றி பெடரருக்கு அதிர்ச்சி கொடுத்தார் சாண்ட்கிரென். 4-வது செட் டைபிரேக்குக்கு சென்றது. இதில் 38 வயதான பெடரர் 7 மேட்ச் பாயிண்ட்கள் பின்தங்கிய நிலையில் இருந்தார்.

ஆனால் அதன் பின்னர் போராடி இந்த செட்டை 7-6 (10-8) என பெடரர் தன்வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானித்த 5-வது செட்டை தனது அனுபவ ஆட்டத்தால் பெடரர் 6-3 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் 3 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெடரர் 6-3, 2-6, 2-6, 7-6 (10-8), 6-3 என்றசெட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட் கணக்கில், 7-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவாவையும் வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால் பதித்தார்.

அரை இறுதி சுற்றில் ஆஷ்லே பார்டி 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனினுடன் மோதுகிறார். சோபியா கெனின் தனது கால் இறுதி சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 78-ம் நிலை வீரரான துனிசியாவின் ஆன்ஸ் ஜாபூரை வீழ்த்தினார். ஆஷ்லே பார்டியும், சோபியா கெனினும் இதற்கு முன்னர் 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் ஆஷ்லே பார்டி 4 ஆட்டங்களிலும், சோபியா கெனின் ஒரு ஆட்டத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x