Last Updated : 28 Jan, 2020 08:34 PM

 

Published : 28 Jan 2020 08:34 PM
Last Updated : 28 Jan 2020 08:34 PM

தோனியால் முடியாதது கோலியால் முடியுமா? புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி? நாளை ஹேமில்டனில் நியூஸி.யுடன் 3-வது டி20 போட்டி

ஹேமில்டனில் நாளை நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வென்று முதல் முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைக்கும் திண்ணிய எண்ணத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

நியூஸிலாந்தில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து டி20 போட்டிகள் விளையாடி வரும் இந்திய அணி ஒருமுறை கூட டி20 தொடரை வென்றதில்லை.

ஆனால், இந்த முறை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்று முன்னிலையில் இருப்பதால், நாளைய போட்டியில் இந்திய அணி வென்றாலே தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துவிடும்.

இப்போது இந்திய அணி இருக்கும் முரட்டுத்தனமான ஃபார்மைப் பார்த்தால் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றுவார்கள் என்று நம்பலாம். ஆனால், நியூஸிலாந்து அணியிடமோ முதலாவது போட்டியில் இருந்த அனைத்து சரியான அம்சங்களும், 2-வது போட்டியில் தவறாக அமைந்துவிட்டன.

ஆக்லாந்து மைதானத்தைப் போல் அல்லாமல் ஹேமில்டன் மைதானம் பேட்ஸ்மேனுக்கு சொர்க்கபுரி எனலாம். இங்கு குறைந்தபட்ச ஸ்கோர் என்பதே 190 ரன்கள் என்பதால் நாளை இரு அணிகளும் ரன் வேட்டையில் இறங்கும். இந்த மைதானத்தில் கடைசியாக நியூஸிலாந்து விளையாடி 5 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற 4 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது

இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த மைதானத்தில் கடைசியாக ஆடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வென்றுள்ளது என்பதால், நாளை டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

மகேந்திர சிங் தோனி தலைமையில் கடந்த 2008-ம் ஆண்டில் வந்தபோதும், கடந்த ஆண்டு கோலி தலைமையில் வந்தபோதும் இந்திய அணி டி20 தொடரை வெல்லாமல் சென்றதால், இந்த முறை ஆக்ரோஷமாகக் களமிறங்கியுள்ளது.

உலகக்கோப்பைப் போட்டிக்குப் பின் இந்திய அணி மோதிய அனைத்து டி20 தொடர்களிலும் வென்றுள்ளது. எந்தத் தொடரையும் இழக்கவில்லை. தென் ஆப்பிரிக்க அணியுடன் கூட 1-1 என்ற கணக்கில் தொடரைச் சமன் செய்தது இந்திய அணி. ஆதலால், பெரும் எதிர்பார்ப்பு இந்திய அணி மீது எழுந்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை நாளை பெரும்பாலும் அணியில் மாற்றம் இருக்கப் போவதில்லை எனத் தெரிகிறது. அவ்வாறு மாற்றம் இருந்தாலும், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக, ஷைனி மட்டுமே களமிறங்குவார். மற்ற வீரர்கள் அனைவரும் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்வதால், எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.

யஜூவேந்திர சாஹல் சிறப்பாகப் பந்து வீசி வருவதால், குல்தீப், சுந்தர் இடம் பெறுவது சந்தேகமே. நாளை இந்திய அணி வென்றுவிட்டால், கடைசி இரு போட்டிகளில் மாற்றம் இருக்கக்கூடும்.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர் கிராண்ட் டி ஹோம் பேட்டிங், பந்துவீச்சு கவலையளிக்கிறது என்பதால், நாளை வரிசை மாற்றிக் களமிறக்கலாம். மேலும், டேர்ல் மிட்ஷெல், குக்ஜெல்லிஜன் ஆகிய இருவரும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்து அணிக்கு இந்திய அணியில் ஜடேஜா, பும்ரா ஆகிய இருவரின் பந்துவீச்சும் பெரும் தொந்தரவாக இருந்து வருகிறது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆதலால் நாளையும் இந்திய அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆதிக்கம் செய்யும் என எதிர்பார்க்கலாம். ஹேமில்டன் ஆடுகளம் மிகவும் சிறியது என்பதால், சிக்ஸர்களும், பவுண்டரிகளும் நாளை பறக்கும் என்பதால் வாணவேடிக்கை நிச்சயம் உண்டு.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டி நடப்பதால், இரு அணிகளும் நல்ல ஸ்கோர் செய்ய முயலும். இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். இந்திய நேரப்படி நண்பகல் 12.20 மணிக்குப் போட்டி தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x