Last Updated : 28 Jan, 2020 01:43 PM

 

Published : 28 Jan 2020 01:43 PM
Last Updated : 28 Jan 2020 01:43 PM

தோனியை ரொம்ப 'மிஸ்' பண்றோம்; பஸ்ல அவருடைய சீட் காலியாகவே இருக்கு: சாஹல் நெகிழ்ச்சி

பஸ்ஸில் தோனி அமரும் இடம் அவருக்காகவே காலியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் சாஹல் : படம் உதவி ட்விட்டர்

ஹேமில்டன்

இந்தியஅணி வீரர்கள் செல்லும் பஸ்ஸில் வழக்கமாக தோனி அமரும் இருக்கையில் எந்த வீரர்களும் அமருவதில்லை, அவருக்கான இடம் காலியாகவே இருக்கிறது, நாங்கள் தோனியை அதிகமாக மிஸ் செய்கிறோம் என இந்திய வீரர் யஜுவேந்திர சாஹல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஜூலை 9-ம் தேதி நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்குப்பின் தோனி கிரிக்கெட் விளையாடவில்லை.

அதன்பின் நடந்த மே.இ.தீவுகள் தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர், இலங்கை, வங்கதேசம், மே.தீவுகள், ஆஸ்திரேலியத் தொடர் அனைத்திலும் தோனி இடம் பெறவில்லை.

தோனி : கோப்புப்படம்

பிசிசிஐ சமீபத்தில் அறிவித்த ஊதிய ஒப்பந்தத்திலும் தோனியின் பெயர் நீக்கப்பட்டது. இதனால் தோனியின் எதிர்காலம் குறித்து மிகப்பெரிய கேள்வி எழுந்தது. தோனி ஓய்வை அறிவிப்பாரா என்ற பேச்சு எழுந்தது.

இதற்கிடையே நீண்டகாலத்துக்குப்பின் ராஞ்சியில் மீண்டும் பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய தோனி, அந்த பேட்டிங் டச் குறையாமல் சிறப்பாகப் பயிற்சி செய்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஐபிஎல் டி20 போட்டியில் தோனி எவ்வாறு விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து, அவர் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று சூசகமாகத் தெரிவித்தார். இதனால் ஐபிஎல் போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலிரு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-வது போட்டிக்காக ஹேமில்டன் சென்றுள்ளது.

ஆக்லாந்தில் இருந்து ஹேமில்டன் செல்லும் வழியில் அணி வீரர்கள் பயணித்த பேருந்தில் சக வீரர்களிடம் யஜுவேந்திர சாஹல் பேசும் காட்சி குறித்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் சாஹல் உருக்கமாகப் பேசியுள்ளார்.
பேருந்து செல்லும் போது, பும்ரா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் உள்ளிட்ட ஒவ்வொருவரிடமும் சாஹல் கேள்வி கேட்டு பேசிக்கொண்டே வரும் காட்சி வந்தது. அப்போது திடீரென கேமிரா, பஸ்ஸின் கடைசி வரிசை இருக்கைக்குச் சென்றது.

அந்த கடைசி வரிசை இருக்கையில் ஜன்னல் ஓரம் இருக்கைக்கு அருகே யஜுவேந்திர சாஹல் சென்று அமர்ந்து காலியாக இருக்கும் அந்த இருக்கையையே வெறித்துப் பார்த்தார்.

அதன்பின் சாஹல் பேசுகையில், " இந்த இருக்கை எப்போதும் அணியில் மிகப்பெரிய லிஜண்டுக்காக ஒதுக்கப்படும். அது வேறுயாருமில்லை தோனிதான் அந்த லிஜெண்ட். எந்த ஒரு பஸ்ஸிலும் தோனிக்காக ஒதுக்கப்படும் கடைசி வரிசையில் ஜன்னல் ஓர இருக்கையில் இப்போது எந்த வீரர்களும் அமருவதில்லை. அணியில் உள்ள ஒவ்வொருவரும் தோனியை அதிகமாக மிஸ் செய்கிறோம் " என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x