யார் இந்த கோபி ப்ரையன்ட்?

யார் இந்த கோபி ப்ரையன்ட்?
Updated on
2 min read

கூடைப்பந்து விளையாட்டு உலகம் இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளது. 20 ஆண்டுகாலம் கூடைப்பந்து ரசிகர்களின் இதயங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த கோபி ப்ரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியுள்ளார். அவரோடு பயணம் செய்த அவரது 13 வயது மகள் உட்பட மொத்தம் 9 பேரின் உயிரை குடித்துள்ளது அந்த கோர விபத்து. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வரை இரங்கல் ப்ரையன்ட்டின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த கோபி ப்ரையன்ட்?

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முன்னாள் வீரர் ஜோ ப்ரையன்ட்டின் கடைசி மகனான கோபி ப்ரையன்ட் தனது மூன்று வயது முதல் கூடைப்பந்தில் ஆர்வம் காட்டி வந்தார். தனது பள்ளிக் காலத்தில் கூடைப்பந்தில் ப்ரையன்ட் நிகழ்த்திய சாதனைகள் தேசிய அளவில் கவனம் பெற்றன. இளம் வயதில்யேயே பல்வேறு விருதுகளையும் குவித்தார். பள்ளிக்கல்வி முடியும் தருணத்தில் அவரது மொத்த பாயிண்டுகள் 2883. இது அப்போதைய பிரபல கூடைப்பந்து வீரர்களான வில்ட் சேம்பர்லேன், லியோனல் சிமோன்ஸ் ஆகியோரை விட அதிகமாக இருந்தது. நாட்டிலேயே சிறந்த இளம் கூடைப்பந்து வீரர் என்று அறிவிக்கப்பட்டார் ப்ரையண்ட்.

இந்த சாதனைகள் ப்ரையன்ட்டை நேரடியாக தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் உள்ளே நுழைய உதவி செய்தன. தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பில் நுழைந்த ஒருசில நாட்களிலேயே ‘லேக்கர்ஸ்’ கூடைப்பந்து அணியிடமிருந்து ப்ரையண்டுக்கு அழைப்பு வந்தது.

இதுவரை 2000, 2001, 2002, 2009, 2010 ஆகிய ஆண்டுகளுக்கான 5 என்பிஏ சாம்பியன்ஷிப்களை ப்ரையன்ட் வென்றுள்ளார்.

2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் 2012ஆம் லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

2006ஆம் ஆண்டு நடந்த டோரண்டோ அணியுடன் ஒரு ஆட்டத்தில் 81 பாயிண்டுகள் எடுத்து சாதனை புரிந்தார். என்பிஏ வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரண்டாவது அதிக பாயிண்டுகளை எடுத்த வீரர் ப்ரையன்ட். (வில்ட் சேம்பர்லேன்- 100 பாயிண்டுகள்)

ப்ரையன்ட் எழுதிய ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘டியர் பாஸ்கெட்பால்’ என்ற திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

18 முறை என்பிஏ ஆல் ஸ்டார் பட்டம் வென்றுள்ளார் கோபி ப்ரையன்ட்.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கடைசி ஆட்டத்தில் 60 பாயிண்டுகள் எடுத்த கையோடு தனது ஓய்வை அறிவித்தார் ப்ரையன்ட்.

41 வயதான கோபி ப்ரையன்ட்டுக்கு வனெஸ்ஸா என்ற மனைவியும், ஜியானா, பியான்கா, நடாலியா, காப்ரி என்ற நான்கு மகள்களும் உள்ளனர்.

இன்று அதிகாலை தனது 13 வயது மகள் ஜியானா, மற்றும் பேஸ்பால் பயிற்சியாளர் ஜான் அல்டோபெல்லி, உள்ளிட்ட 8 பேருடன் கோபி ப்ரையன்ட் ஒரு தனியார் ஹெலிகாப்டரில் தவுசன்ட் ஆக்ஸ் என்ற இடம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். கடும் பனிமூட்டம் காரணமாக அடர்ந்த மரங்கள் சூழ்ந்த மலைப்பகுதியின் அருகே சிக்கிக் கொண்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதில் ப்ரையன்ட், ஜியானா உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர்.

20 ஆண்டுகள் கூடைப்பந்து உலகை கட்டிப்போட்டிருந்த ஓர் ஆளுமையின் இந்த திடீர் மரணம் உலகம் முழுவதுமுள்ள கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in