

ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி நியூஸிலாந்து அணியை 203 ரன்களை எடுக்க அனுமதித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் வெளுத்துக் கட்டி அரைசதம் அடித்தனர். இந்திய அணியில் பும்ராவைத் தவிர வேறு யாரும் சரியாக வீசவில்லை.
அதே போல் இலக்கை இந்திய அணி விரட்டும் போது ஹிட்மேன் ரோஹித் ஆட்டமிழந்தாலும் ராகுல்,கோலி சாத்தி எடுக்க ஓவருக்கு 11 ரன்கள் என்ற விகிதத்தில் சென்றது ரன்விகிதம், ஆனால் கோலி, ராகுல், துபே ஆட்டமிழந்த பிறகு கொஞ்சம் ஐயம் ஏற்பட்டது, ஆனால் ஷ்ரேயஸ் அந்த ஐயத்தை முடித்து வைத்தார், மிகப் பிரில்லியண்ட் ஆன ஒரு ஆட்டத்தில் ஒரு ஓவரை மீதம் வைத்து வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
ஒரு விதத்தில் பும்ராவின் டைட்டினால் கடைசி 3 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே இந்திய அணி கொடுத்தது, இதனால் ஸ்கோர் 210 ரன்களை எட்டாமல் முடிந்தது நியூஸிலாந்து.
இது குறித்து விராட் கோலி கூறும்போது, “ஆட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். 2 நாட்களுக்கு முன்புதான் களமிறங்கினோம் வந்தவுடன் இந்த மாதிரியான ஒரு ஆடட்ம் ஒட்டுமொத்த தொடரையுமே முடுக்கி விட்டுள்ளது. 80% இந்திய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தது பெரிய விஷயம்.
200 ரன்களுக்கும் மேலான விரட்டலில் ரசிகர்களின் இத்தகைய ஆதரவும் முக்கியம், மைதானச்சூழல் கிரேட். ஜெட்லாக் பற்றி நாங்கள் பேசவில்லை, அதையொரு சாக்குப் போக்காகக் கூற விரும்பவில்லை.
முக்கியமற்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் நம் கவனம் சிதறி விடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் நல்ல தொடரை ஆடினோம், அதே நம்பிக்கையை இங்கு சுமந்து வந்தோம் அவ்வளவே. இந்தப் பிட்சில் பவுலர்கள் யாரையும் குறைகூறக்கூடாது.
மிடில் ஓவர்களில் அவர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தினோம். 210 ரன்களுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்தியது முக்கியமானது. பீல்டிங் மட்டும்தான் இன்னும் கொஞ்சம் நாம் முன்னேற வேண்டிய பகுதி, மைதானத்தின் பரிமாணங்களைப் புரிந்து கொள்வதும் அவசியம்” என்றார்.