Published : 24 Jan 2020 12:14 PM
Last Updated : 24 Jan 2020 12:14 PM

சாதனை 24-வது கிராண்ட்ஸ்லாம் கனவு தகர்ந்தது: செரீனாவுக்கு அதிர்ச்சியளித்த சீன வீராங்கனை வாங்

தோற்று வெளியேறும் செரீனா, பின்னால் வெற்றி பெற்ற வாங். | ஏ.எஃப்.பி.

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதன் மூலம் சாதனை 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவுடன் வந்த அமெரிக்க ஆல் டைம் கிரேட் செரீனா வில்லியம்சின் கனவு தகர்ந்தது. மகளிர் ஒற்றையர் 3வது சுற்றில் சீன வீராங்கனை கியாங் வாங் என்பவரிடம் செரீனா 6-4, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.

கனவு தகர்ந்ததில் செரீனாவின் கண்களில் நீர் முட்டியது, ஆனால் அவர் அடக்கிக் கொண்டது தெரிந்தது. வாங் கியாங் உலக தரவரிசையில் 29வது இடம் பெற்ற வீராங்கனை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

2006 ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாமில் விரைவில் வெளியேறிய பிறகு ஹார்ட் கோர்ட்டில் செரீனா 3வது சுற்றில் இன்று வெளியேறினார். கடந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் இதே சீன வீராங்கனையை செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-0 என்று ஊதினார். ஆனால் அதன் பிறகு வாங் தனது ஆட்டத்தை வெகுவாக மேம்படுத்தியதை செரீனா அறிந்திருக்க வாய்ப்பில்லை.

செரீனா, செரீனாவாக ஆடவில்லை, மொத்தம் 56 தவறான ஷாட்களில் 27 முறை பேக் ஹேண்ட் ஷாட்டில் தவறிழைத்தார், மாறாக வாங் 20 முறைதான் தவறிழைத்தார்.

முதல் செட்டில் இருவரும் 4-4 என்று இருந்த தருணத்தில் செரீனா தன் சர்வில் செய்த டபுள் ஃபால்ட்டினால் ஆட்டம் வாங்கிற்கு சாதகமாக மாறியது, அதன் பிறகு 3 ட்ராப் ஷாட்களையும் செரீனா சொதப்ப முதல் செட்டை வாங் 6-4 என்று கைப்பற்றினார்.

செரீனாவின் முதல் சர்வ்கள் சரியாக உட்காரவில்லை, அதனால் 2ம் சர்வ்கள் துல்லியத்தை நோக்கி கொஞ்சம் மெதுவாக அடிக்கப்பட்டதால் வாங் அதனை வெளுத்து வாங்கினார்.

2வது செட்டிலும் செரீனாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பிரேக் செய்த வாங் சடுதியில் 4-2 என்று முன்னிலை வகித்தார். தன் சர்வை அபாரமாக வீசி 4-3 என்று ஆட்டம் சென்று கொண்டிருந்தது, அதன் பிறகு 5-4 என்று வாங் மேட்சை முடிக்க சர்வ் செய்த போது அங்கிருந்து பழைய செரீனாவைக் காண முடிந்தது சீன வீராங்கனை வாங்கும் சில அன் ஃபோர்ஸ்டு பிழைகளைச் செய்ய, செரீனா தனது பேக்ஹேண்ட் கிராஸ் கோர்ட் ஷாட்களில் அசத்தத் தொடங்கி கடைசியில் 24 ஷாட்கள் கொண்ட ஒரு ராலியில் கடைசி ஃபோர் ஹேண்ட் ஷாட்டில் செரீனா பிரேக் செய்தார். 5-5 என்று ஆட்டம் சமநிலை பெற்று பிறகு 6-6 என்று டை பிரேக்கருக்குச் சென்றது.

டைபிரேக்கரில் செரீனா விரைவில் 5-2 என்று ஃபோர் ஹேண்ட் வின்னர் ஷாட்டில் உறுதிப்படுத்தினார். 2வது செட்டை செரீனா 7-6 என்று கைப்பற்றிய போது ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

3வது செட்டில் மாறி மாறி யார் வெற்றி பெறுவார்கள் என்ற த்ரில் செட்டாக அமைந்தது. 11 கேம்களும் அசாத்தியமான திறமைகளுடன் ஆடப்பட்டது. கடைசியில் ஆட்டத்தை தக்க வைக்கும் சர்வில் செரீனா வில்லியம்ஸ் 15--40 என்று பின் தங்கினார், ஆனால் சர்வ், கிரவுண்ட் ஷாட்கள் மூலம் 40-40 என்று டியூஸுக்குக் கொண்டு சென்றார். ஆனால் வாங் தன் 3வது மேட்ச் பாயிண்டை வென்றார், செரீனாவின் ஷாட் நெட்டைத் தாக்க அவரது இருதயம் நொறுங்க, வாங் மகிழ்ச்சியில் திளைத்தார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4வது சுற்றுக்கு சீன வீராங்கனை வாங் முன்னேறினார். 4வது சுற்றில் கரோலின் வோஸ்னியாக்கியை தோற்கடித்த டியுனிசியாவின் ஆன்ஸ் ஜேபரை எதிர் கொள்கிறார் வாங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x