பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சிவராமகிருஷ்ணன் விண்ணப்பிக்க முடிவு

எல்.சிவராமகிருஷ்ணன்
எல்.சிவராமகிருஷ்ணன்
Updated on
1 min read

பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் முன்னாள்சுழற்பந்து வீச்சாளரான எல்.சிவராமகிருஷ்ணன் விண்ணப்பிப்பதை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு ராஜேஷ் சவுகான், இடது கை பேட்ஸ்மேனான அமே குரேஷியா ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுடன் முன்னாள் ஜூனியர்தேர்வுக்குழு உறுப்பினர் பிரிதம் காந்தே, தற்போதைய ஜூனியர் தேர்வுக்குழு உறுப்பினர் ஞானேந்திராபாண்டே ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் இவர்கள் இருவரது பெயர்கள் பரிசீலிக்கப்படாது என கருதப்படுகிறது. ஏனெனில் இவர்கள் லோதா கமிட்டியின் பரிந்துரைகளின்படி ஏற்கெனவே 4 ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர்.

அநேகமாக தேர்வுக்குழு தலைவராக எல்.சிவராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்படக்கூடும் என தெரிகிறது.

ஏனெனில் புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களில் ‘சீனியர் மோஸ்ட்டெஸ்ட் கேப்’ வீரராக திகழ்பவரேதலைவராக நியமிக்கப்படுவார். அந்த வகையில் புதிய தேர்வுக்குழுதலைவராக சிவ ராமகிருஷ்ணன்தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது.

சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதில், 1983-ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

பிசிசிஐ அமைப்பானது எம்எஸ்கே பிரசாத் (தென் மண்டலம்), ககன் கோடா (மத்திய மண்டலம்) ஆகியோரது பதவி காலம் நிறைவு பெறுவதையொட்டி அவர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக கடந்த வாரம் விண்ணப்பங்களை கோரியிருந்தது. இந்த இரு உறுப்பினர் பதவிக்கும் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும்.

சிவராமகிருஷ்ணன், பென்சன்- ஹெட்ஜஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றதில் முக்கிய அங்கம் வகித்தார். 20 வருடங்களுக்கு மேலாக வர்ணணையாளராகவும் பணியாற்றி வருகிறார். அத்துடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியிலும் உறுப்பினராக செயல்பட்டுள்ளார். சிவராமகிருஷ்ணனுடன் வெங்கடேஷ் பிரசாத், சஞ்சய் பாங்கர் ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது.

சிவராமகிருஷ்ணன் கூறும்போது, “நான் எனது குடும்பத்தினருடன் பேசினேன், தேசிய தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளேன். பிசிசிஐ எனக்கு வாய்ப்பு அளித்தால், நான் வித்தியாசத்தை உருவாக்குவேன். எனக்கு நான்கு ஆண்டுகள் கிடைத்தால், இந்திய கிரிக்கெட்டை ஒரு சிறந்த இடத்தில் நிறுத்துவேன். மூன்று துறைகளிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சில் பெஞ்ச் வலிமையை உருவாக்குவேன்” என்றார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in