Published : 24 Jan 2020 10:30 AM
Last Updated : 24 Jan 2020 10:30 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ரபேல் நடால், பிளிஸ்கோவா

ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் பிரிவில் ரபேல் நடால், டேனியல் மேத்வதேவ், டொமினிக் தீம், அலெக்சாண்டர் ஜிவெரேவ் உள்ளிட்டோரும் மகளிர் பிரிவில் கரேலினா பிளிஸ்கோவா, சிமோனா ஹாலப் உள்ளிட்டோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-7, 7-6(7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டெல்போனிஸை எளிதாக வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார். அதேவேளையில் 4-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 7-5, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டின்ஸையும், 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-2, 5-7, 6-7 (5-7), 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்டையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 7-6 (7-5), 6-4, 7-5 என்ற நேர் செட்டில்பல்கேரியாவின் இகோர் ஜெராசிமோவையும், 10-ம் நிலை வீரரான பிரான்சின் கெல் மோன்பில்ஸ் 4-6, 7-6 (10-8), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவோ கார்லோவிச்சையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தனர்.

11-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், 15-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 16-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லேவ், 19-ம் நிலைவீரரான அமெரிக்காவின் ஜான்இஸ்னர், 23-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், 27-ம் நிலை வீரரான ஸ்பெயின் கரேனோ பஸ்டா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வதுசுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் லாரா சீக்மண்டையும், 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஹாரியட் டார்ட்டையும், 6-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் லத்வியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

9-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவினி அரினா ரோடினோவாவையும், 16-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஹீதர் வாட்சனையும், 17-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்சில்லாவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x